search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை அரசுக்கு எதிராக பா.ஜனதா எம்.எல்.ஏ. திடீர் போர்க்கொடி
    X

    புதுவை அரசுக்கு எதிராக பா.ஜனதா எம்.எல்.ஏ. திடீர் போர்க்கொடி

      புதுச்சேரி:

      புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

      அரசு பதவிகளில் இடம்பெறாத என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டாக அவர்களுக்கு வாரிய பதவிகள் தர வில்லை.

      இதனால் ஏற்கனவே அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு கோவில் அறங்காவலர் குழு அமைக்கக்கூட பரிந்துரைகளை ஏற்கவில்லை என பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் போர்க்கொடி உயர்த்தினார்.

      அவர் சட்டசபையில் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினார். அவருக்கு ஆதரவாக பா.ஜனதா எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

      தங்கள் தொகுதியில் பணிகள் புறக்கணிக்கப்படுவதாக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ ஏற்கனவே புகார் கூறி வந்தார். இதற்காக சட்டமன்ற நிகழ்வுகளை புறக்கணிக்கப்போவதாகவும் அவர் கூறியிருந்தார். சபாநாயகர் செல்வம் அவரை அழைத்து பேசி சமாதானப்படுத்தினார். பணிகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

      ஆனால் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, காலம் கடந்தும் தனது கோரிக்கைகள் இதுவரை நிறைவேறவில்லை என தற்போது மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவர் சட்டசபை முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த முடிவை சபாநாயகர் செல்வத்திடம் கடிதமாகவும் அவர் வழங்கியுள்ளார்.

      புதுவை சட்டசபை வரும் 20-ந் தேதி கூட உள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ கல்யாண சுந்தரத்தின் திடீர் போராட்ட அறிவிப்பு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

      பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.வே ஆட்சிக்கு எதிராக போராட்டம் அறிவித்திருப்பது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      Next Story
      ×