என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் லாரியை வழிமறித்து டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச்சென்றனர்.
- இதையடுத்து அபினேஷ் லாரியை நிறுத்தியதும் அந்த வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
புதுச்சேரி:
மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் லாரியை வழிமறித்து டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச்சென்றனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் (வயது 28) லாரி டிரைவர். இவர் புதுவை இந்திரா காந்தி சிலை வழியாக விழுப்புரத்துக்கு லாரியை ஓட்டிச்சென்று கொண்டிருந்தார்.
அப்போது தமிழக பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென லாரியை வழிமறித்தனர்.
இதையடுத்து அபினேஷ் லாரியை நிறுத்தியதும் அந்த வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். அப்போது அருகில் இருந்த பொது மக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்ற போது அவர்களையும் அந்த வாலிபர்கள் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கினர்.
அதோடு தங்களை பிடிக்க முயன்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிசென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அபினேஷ் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இது குறித்து உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து லாரிடிரைவர் மற்றும் பொதுமக்களை தாக்கி மிரட்டிவிட்டு சென்ற வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.






