search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை , காரைக்காலில் 14 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள்
    X

    கோப்பு படம்.

    புதுவை , காரைக்காலில் 14 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள்

    மீன்வள ஆராய்ச்சி குழுவினர் மீனவர்களுடன் ஆலோசனை

    புதுச்சேரி:

    இந்திய கடல் வளத்தை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த காலத்தில் மீனவர்களுக்கு நிவாரணமும் அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் மீன்வளத்தை பெருக்க மத்திய அரசு முடிவெடுத்து திட்டங்களை வகுத்து வருகிறது.

    பவளப்பாறைகள்

    பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்கால் கடலோர பகுதியில் மீன்வளத்தை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மீன்வளத்தை பெருக்கும் வகையில் முதல்கட்டமாக 14 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள் ரூ.4 கோடியே 34 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது.

    இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி நிதி அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதுவை, காரைக்காலில் கடலோர பகுதிகளில் செயற்கை பவளப்பாறைகளை நிறுவ உரிய இடங்களை ஆய்வு செய்து கண்டறிய உள்ளனர்.

    மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவன நிபுணர் குழு வரும் 30-ந் தேதி வரை புதுவையிலும், டிசம்பர் 1, 2-ந் தேதிகளில் காரைக்கால் பகுதிகளிலும் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறது. மேலும் இந்த ஆய்வுக்குழுவினர் மீனவ கிராம மக்களிடையே ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி செயற்கை பவளப்பாறைகள் நிறுவ சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து உரிய இடங்களை தேர்வு செய்ய உள்ளது.

    ஆலோசனை

    செயற்கை பவளப்பாறை களை மீன்கள் மறைவிடமாக பயன்படுத்தி இனப்பெருக்கம் செய்வதால் மீன்வளம் பெருகும்.

    மத்திய மீன்வள ஆராயச்சி நிறுவன விஞ்ஞானி ஜோ கீழக்கூடன் தலைமையிலான குழுவினர் இன்று காலை கனகசெட்டிகுளம், பெரியகாலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச் சாவடி பகுதியில் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் மீன்வளதுறை இயக்குனர் முகமது இஸ்மாயில், அந்தந்த பகுதி மீனவ பஞ்சாயத்தார், மீனவர் கூட்டுறவு சங்கத்தினர், மீன்பிடி படகு உரிமையாளர்கள், மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    தொடர்ந்து இன்று மதியம் இந்த பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்கின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) காலை சோலைநகர், வைத்திக்கப்பம், குருசுகுப்பம் பகுதி மீனவ பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு நடத்தி மாலையில் கள ஆய்வு செய்கின்றனர்.

    நாளை மறுநாள் (புதன்கிழமை) வம்பாகீரப்பாளையம், பெரியவீராம்பட்டினம், சின்னவீராம்பட்டினத்திலும், 30ம் தேதி புதுக்குப்பம், நல்லவாடு, நரம்பை, பனித்திட்டு பகுதியிலும் காலையில் மீனவ பஞ்சாயத்தாருடன் கலந்தாய்வு நடத்தி, மாலையில் கள ஆய்வு நடத்துகின்றனர்.

    அதன்பின் நிபுணர்குழு காரைக்கால் சென்று மீனவர்களோடு கலந்தாய்வு, கள ஆய்வு நடத்துகிறது.

    Next Story
    ×