என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- முதல்-அமைச்சருக்கு கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கை
- புதுவை விடுதலை நாளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுவை மாநிலம் முழுமையான விடுதலை அடைய மாநில அந்தஸ்தினை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
- மாநிலத்திற்கு முழு அதிகாரம் வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசினை வலியுறுத்தி வருகிறார்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவுமான அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை விடுதலை நாளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி புதுவை மாநிலம் முழுமையான விடுதலை அடைய மாநில அந்தஸ்தினை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கையினை முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது. புதுவை சட்டப்பேரவையில் ஏறக்குறைய 13 முறை தீர்மானங்கள் பல்வேறு அரசுகளால் மாநில அந்தஸ்து வேண்டி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுகளுக்கு அனுப்பியும் இதுவரை நமக்கான அதிகார விடுதலை இன்னும் கிடைக்கவில்லை.
புதுவை மாநிலம் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் பல நெருக்கடிகளை தற்பொழுது சந்தித்து வருகிறது. புதுவை மாநிலத்தை நிதிக் குழுவில் சேர்த்து, நமக்கான வரி வருவாய் பங்கினை முறையாக, உரிமையாக, அளிப்பதில் கூட மத்திய அரசு இதுநாள்வரை முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கக்கூடிய செயலாகும்.
மாநிலத்தில் நிலவுகின்ற பல்வேறு முக்கியமான பிரச்சனைகளை உடனுக்கு டன் தீர்ப்பதற்கு, நமக்கு நிதி அதிகாரமும் இல்லை. நிர்வாக அதிகாரமும் இல்லை என்பதனை உணர்ந்துதான் முதல்-அமைச்சர் நமது மாநிலத்திற்கு முழு அதிகாரம் வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசினை வலியுறுத்தி வருகிறார்.
கூடாநட்பு கேடாய் முடியும்! என்பது போல மாநிலத்தின் அரசு வேலை வாய்ப்பு பணியிடங்களை ஏதோ மத்திய அரசு சொல்லித்தான் நிரப்பப்பட உள்ளது போன்ற ஒரு தவறான கண்ணோட்டத்தினை மக்கள் மத்தியில் விதைக்க பா.ஜனதாவினர் முயல்வது போன்ற ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் புதுவை முதல்வர் தள்ளப்பட்டுள்ளார்.
சென்ற 2 சட்டமன்ற கூட்டத் தொடர்களிலும் தி.மு.க. மற்றும் பிரதான கட்சிகள் வைத்த கோரிக்கைகளை நிறை வேற்றும் வகையில் அரசு பணியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சார் முயற்சி எடுப்பதை கூட பா.ஜனதாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி, அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டி மத்திய உள்துறை மந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கை மனுவை நேரடியாக அளிக்க வேண்டும்.
பொது வெளியில் மாநில அந்தஸ்து வேண்டும் என கூறுவதை விட்டுவிட்டு அதற்கான முன்னெடுப்புகளை உண்மையாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






