என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு
    X

    உப்பளம் தொகுதியில் பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அருகில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. உள்ளார்.

    பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு

    • புதுவை ரெயில் நிலையத்துக்கு பின்புறம் உப்பளம் தொகுதிக்குட்பட்ட கீழ்தோப்பு பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் வசித்து வந்தனர்.
    • இதையடுத்து, பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு ரெட்டியார்பாளையம் பகுதியில் அரசு குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் நிலையத்துக்கு பின்புறம் உப்பளம் தொகுதிக்குட்பட்ட கீழ்தோப்பு பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் வசித்து வந்தனர்.

    ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் குடியிருந்ததால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்தையும் ரெயில்வே துறையினர் இடித்து அகற்றினர். இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்க கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

    இதையடுத்து, பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு ரெட்டியார்பாளையம் பகுதியில் அரசு குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கி தரப்பட்டுள்ளன. இந்நிலையில் வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முன்னிலையில் பாதிக்கப்பட்ட 15 குடும்பத்தினருக்கு வீடு ஒதுக்கப்பட்டதற்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உப்பளம் தொகுதி தி.மு.க செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் ரவி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், தி.மு.க. இளைஞரணி ஆரோக்கியராஜ், தி.மு.க. பிரமுகர்கள் நோயல், அஷ்ரப், கிளை செயலாளர்கள் செல்வம், ரவிக்குமார், காலப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×