என் மலர்
புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் போராட்ட குழுவினர் மனு அளித்த காட்சி.
மாநில அந்தஸ்து தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம்
- புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற 60 சமூக மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து மாநில அந்தஸ்து போராட்ட குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
- தங்களது கூட்டணி ஆட்சி மற்றும் கட்சியில் இருப்பவர்கள் மாநில அந்தஸ்து சம்மந்தமாக பொது வெளியில் பேசுவது ஒத்த கருத்துடையதாக இருக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற 60 சமூக மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்து மாநில அந்தஸ்து போராட்ட குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
மாநில அந்தஸ்து போராட்ட குழுவினர் ஒருங்கிணைப்பாளர் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற தங்களுக்கு உதவும் விதமாக மக்களிடம் எடுத்து சென்று போராடவும் உங்களோடு கைக்கோர்க்கவும் தயாராக இருக்கிறோம். ஆனால் தங்கள் கூட்டணியில் இருக்கும் பா.ஜனதா தலைவர் மாநில அந்தஸ்துக்கு எதிர் கருத்து கூறியிருப்பது மக்களை குழப்பும் விதமாக இருந்தது.
இதனை சரிசெய்ய கூட்டணி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். தங்களது கூட்டணி ஆட்சி மற்றும் கட்சியில் இருப்பவர்கள் மாநில அந்தஸ்து சம்மந்தமாக பொது வெளியில் பேசுவது ஒத்த கருத்துடையதாக இருக்க வேண்டும்.
அதேபோல அனைத்து கட்சி கூட்டம் மற்றும் அனைத்து பொதுநல அமைப்பு களையும் கூட்டத்தை கூட்டி மாநில அந்தஸ்துக்கான கோரிக்கை யை வலுப்பெற செய்ய வேண்டும்.மேலும், சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து சென்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்
எங்களது இந்த கோரிக்கைகளை காலதாம தப்படுத்துவதால் அரசியல் கட்சி தலைவர்கள் எங்களையும் சேர்த்து விமர்சனம் செய்கிறார்கள். ஆகையால் எங்களது கோரிக்கைகளை துரிதமாக நிறைவேற்ற ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மனுவை பெற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி மார்ச் மாதம் தொடங்க உள்ள பட்ஜெட் கூட்ட தொடரில் ஏகமனதாக மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளோம் என்றும் விரைவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட இருப்பதாகவும் உறுதி அளித்தார்.






