என் மலர்
புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. மனு அளித்த காட்சி.
முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க.மனு
- புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
- ஜிப்மரில் காலியாக உள்ள 433 செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்ப அரசாணை வெளியி டப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மரில் காலியாக உள்ள 433 செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்ப அரசாணை வெளியி டப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் இதற்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. இதனால், நம் மாநிலத்தில் செவிலியர் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.
மருத்துவக் கல்லூரியில் 26.5 சதவீத இட ஒதுக்கீடு போன்று, வேலை வாய்ப்பிலும் 26.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் நம் மாநிலத்தில் நர்சிங் படித்த சுமார் 115 நபர்களுக்கு செவிலியர் பணி கிடைக்கும்.
மேலும், செவிலியர் பணி என்பது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் நேரிடையாக தொடர்புடைய பணியாகும். மருத்துவமனைக்கு வரும் தமிழ் மொழி பேசும் நோயாளிகளிடம் வட நாட்டிலிருந்து தேர்வாகும் செவிலியர்கள் எந்த மொழியில் நோயாளிகளிடம் பேசுவார்கள் என்பது கூட உணராமல் அகில இந்திய அளவில் செவிலியர் தேர்வு நடத்துவது என்பது தவறான ஒன்றாகும்.
ஜிப்மர் நிர்வாகத்தில் வேலை வாய்ப்பில் 26.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது நம் மாநில உரிமையாகும். மாநில உரிமையை பெற வேண்டியது தங்களது தலையாய கடமையாகும்.
எனவே அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, ஜிப்மரில் வேலை வாய்ப்பில் நமக்குரிய இடஒதுக்கீடு குறித்து தீர்மானம் நிறைவேற்றி தலைமை செயலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் டெல்லிக்கு நேரில் சென்று மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அமைச்சர வையின் தீர்மானத்தை நேரில் அளிக்க தாங்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதுவரை ஜிப்மர் செவிலியர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
சந்திப்பின் போது மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.






