என் மலர்
புதுச்சேரி

கடல் அரிப்பை தடுக்க தடுப்பு சுவர் அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். அருகில் அமைச்சர் லட்சுமிநாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. உள்ளனர்.
பிள்ளைச்சாவடியில் ரூ.6 கோடியில் தடுப்பு சுவர் உள்பட புதுவையில் ஒரே நாளில் ரூ.24 கோடிக்கு திட்ட பணிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
- புதுவை மாநில தமிழக எல்லையில் அமைந்த பிள்ளை சாவடி கிராமத்தில் கடலோர பகுதிகள் அரிப்பால் மிகுந்த பாதிப்பை அடைந்து வருகின்றன
- ஒரே நாளில் ரூ.24 கோடியே 70 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.
புதுவை மாநில தமிழக எல்லையில் அமைந்த பிள்ளை சாவடி கிராமத்தில் கடலோர பகுதிகள் அரிப்பால் மிகுந்த பாதிப்பை அடைந்து வருகின்றன.
இயற்கை சீற்றத்தாலும், கடலின் குறுக்கே அமைக்கப்பட்ட துறைமுகம், தமிழ் நாடு பகுதியான தந்திராயன்குப்பம் மற்றும் பொம்மையார்பாளையம் உள்ளிட்ட பின்ளைச் சாவடி கிராமத்தின் தெற்கு சுடலோர பகுதிகளில், கடல் அரிப்பை தடுக்க மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கை போன்றவை களால் புதுவை பிள்ளைச் சாவடி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடல் அரிப்பு மேலும் அதிகமாகி வருகிறது.
இதனால், பிள்ளைச் சாவடி உள்ளிட்ட கிராமத்தில் வாழும் மீனவர்கள் உள்ளிட்ட, கடலோர மக்களின் வீடுகள், வலை பின்னும் கூடம் போன்ற அடிப்படை உரிமைகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. பாதிப்புகளில் இருந்து மக்களையும் அவர்களது உடைமைகளையும் காக்கும் வகையில் ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் என்.சி.சி.ஆர். தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆலோசனைகளை பெற்று, பிள்ளைச் சாவடி கிராமத்தில் கடல அரிப்பை தடுக்கும் வகையில், கடலோரத்தில் தடுப்பு சுவர்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
கடல் அரிப்பை தடுக்கும் வகையில் 6 தடுப்பு சுவர்கள் அமைக்கபட இருக்கின்றன. 50 மீட்டர் நீளத்திற்கு ஒரு தடுப்புச்சுவரும் 40 மீட்டர் நீளத்திற்கு 2 தடுப்புச்சுவரும், 30 மீட்டர் நீளத்திற்கு 2 தடுப்புச்சுவரும், 20 மீட்டர் நீளத்திற்கு ஒரு தடுப்புச் சுவரும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தடுப்புச் சுவர்கள் வெவ்வேறு இடைவெளி விட்டு அமைக்க வும், அதில் 2 டன்னில் இருந்து 10 கிலோ வரை எடையுள்ள கருங்கல் கற்கள் 3 லேயர்களாக போடப்படும் வகையில் கடலோர தடுப்புப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.6¼ கோடியாகும். இந்த் திட்ட பணிகள் 4 மாதங்களில் முடிக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில். பொதுப் பணித்துறை அமைச்சர் நாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, தலைமை பொறியாளர், பழனியப்பன் கண்காணிப்பு பொறியாளர், பாஸ்கரன, உதவி பொறியாளர் சீனு, சம்பந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இதே போல் புதுவை கருவடிக்குப்பம் லட்சுமி நகர் ஓடையில் ரூ.3 கோடியில் பக்கவாட்டு கால்வாயுடன் கூடிய கான்கிரீட் பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணியையும் பூமி பூஜை செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
ஒட்டு மொத்தமாக புதுவையில் இன்று ஒரே நாளில் ரூ.24 கோடியே 70 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது.






