search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மின்துறை தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 300 மின் ஊழியர்கள் நள்ளிரவில் கைது
    X

    மின்துறை தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 300 மின் ஊழியர்கள் நள்ளிரவில் கைது

    • மின் ஊழியர்களுக்கு கவர்னரும், மின்துறை அமைச்சரும் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
    • கைது செய்யப்பட்ட மின் ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டவாறு பஸ்களில் சென்றனர்.

    புதுச்சேரி:

    மின்துறையை தனியார் மயமாக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து மின் ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதனால் மின் தடை ஏற்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். புதுவை முழுவதும் இருளில் மூழ்கியதால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், கிழக்கு கடற்கரை சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் மக்கள் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மின் ஊழியர்களுக்கு கவர்னரும், மின்துறை அமைச்சரும் கடும் எச்சரிக்கை விடுத்தனர். போராட்டத்தில் ஈடுபடும் மின் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என கூறியிருந்தனர்.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக ஆவடியில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (துணை ராணுவம்) வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் அடையாள அணிவகுப்பு நடத்தினர். மேலும் துணை மின்நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இதற்கிடையே நேற்று இரவு புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் துணை ராணுவம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு வம்சிதரெட்டி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். வளாகத்தினுள் அமர்ந்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியர்களுக்கு போலீசார் 2 முறை எச்சரிக்கை விடுத்தனர்.

    அரசுக்கு சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தி போலீசாரால் தேடப்படும் மின் துறை ஊழியர்கள் தலைமறைவாக இருக்க உடந்தையாக இருப்பது சட்டவிரோதமானது. ஆகையால் போலீசாரால் தேடப்படும் நபர்கள் இருந்தால் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். வேலை நேரத்தில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும்.

    இப்போது உடனே கலைந்து செல்லுமாறும், இல்லாவிட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரித்து 5 நிமிடம் அவகாசம் வழங்கினர்.

    அதன் பிறகும் அவர்கள் கலைந்து போகாததால் நள்ளிரவு 11 மணி அளவில் 300-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை 5 பஸ்களில் எற்றி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் கொண்டு சென்றனர்.

    கைது செய்யப்பட்ட மின் ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டவாறு பஸ்களில் சென்றனர்.

    இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சி.பி.டி.யு. புதுவை மின்துறை ஊழியர் சங்க தலைவர் முருகசாமி செயற்குழு உறுப்பினர் நடராஜ் ஆகிய 2 நிர்வாகிகளை புதுவை அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×