என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்க இடம் பிடித்து காத்திருக்கும் பக்தர்கள்.
    X
    பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்க இடம் பிடித்து காத்திருக்கும் பக்தர்கள்.

    பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் இறங்க ஒருவாரத்துக்கு முன்னதாகவே காத்திருக்கும் பக்தர்கள்

    சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்மிக்க பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன் கூட்டியே இப்போதே ஏராளமான பக்தர்கள் தடுப்பு கம்புகள் இடையே காத்திருக்கிறார்கள்.
    சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்மிக்க பண்ணாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 27-ந் தேதி பூச்சாட்டும் நிகழ்ச்சியுடன்குண்டம் விழா தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி பண்ணாரிஅம்மன் உற்சவர் சப்பரத்தில் திருவீதிஉலா வந்தது. பண்ணாரி மற்றும் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஊர்களில் அம்மன் திருவீதி உலா வந்தது. ஒவ்வொரு ஊரிலும் திரளான பக்தர்கள் கூடி அம்மனை வழிபட்டனர்.

    நேற்று நள்ளிரவு அம்மன் மீண்டும் கோவிலை அடைந்தது. இதையொட்டி கோவிலில் கம்பம் சாட்டப்பட்டது.

    வரும் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் குண்டம் விழா அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது. தலைமை பூசாரி அம்மன் சப்பரத்தை தலையில் சுமந்து முதலில் குண்டம் இறங்கி தீ மிதிக்கிறார். இதை தொடர்ந்து 5 கிலோமீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தீமிதிக்கிறார்கள்.

    ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் என மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தீமிதிக்கிறார்கள்.

    குண்டம் விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதி வழியாக பல பக்தர்கள் நடைபயணமாகவும், மாட்டு வண்டிகள் மூலமாகவும் கோவிலுக்கு வருவதையொட்டி யானை, கரடி, காட்டெருமை உள்பட வன விலங்குகளின் அபாயத்தில் சிக்காமல் இருக்க வனத்துறையினரும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    குண்டம் விழாவுக்குஒரு வாரத்துக்கு முன் கூட்டியே இப்போதே ஏராளமான பக்தர்கள் தடுப்பு கம்புகள் இடையே காத்திருக்கிறார்கள்.

    வெளியூர் பக்தர்களான இவர்கள் குடும்பத்துடன் இடம்பிடித்து காத்திருக்கும் இடங்களிலேயே சமைத்து சாப்பிட்டு அங்கேயே படுத்துக்கொள்கிறார்கள்.
    Next Story
    ×