search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்தது
    X

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்தது

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மண்டல பூஜை நிறைவடைந்தது. மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படுகிறது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு, ஒரு மண்டலம் (41 நாட்கள்) நிறைவடைந்ததையொட்டி, முக்கிய நிகழ்வான மண்டல பூஜை நேற்று நடந்தது.

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கிகள் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து கடந்த 22-ந் தேதி காலை ஊர்வலமாக புறப்பட்டு நேற்று முன்தினம் சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கருவறைக்குள் கொண்டு சென்று மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை நடந்தது.

    சபரிமலையில் நேற்று மதியம் 11.55 மணிக்கு மண்டல பூஜை நடைபெற்றது. முன்னதாக களபாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.

    மண்டல பூஜையின்போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்று சரணகோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து நீண்ட வரிசையில் வெகுநேரமாக காத்திருந்து பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.



    ஐயப்ப சுவாமி விக்ரகம் தங்கஅங்கி அணிவிக்கப்பட்டு அலங்கார தீப ஒளியில் ஜொலித்தது. பிற்பகல் 1.30 மணி வரை தங்க அங்கி அணிந்த சுவாமியை பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டனர்.

    மண்டல பூஜை முடிவடைந்ததை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு அடைக்கப்பட்ட கோவில் நடை மாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்பட பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடந்தன. இரவு அத்தாள பூஜையும், பின்னர் அரிவராசனம் பாடல் ஒலிக்கப்பட்டு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

    மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.

    மண்டல பூஜையையொட்டி நேற்று சபரிமலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
    Next Story
    ×