search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை கோவிலில் செண்டை மேளம் அடித்த இசைக்கலைஞர்களை படத்தில் காணலாம்.
    X
    சபரிமலை கோவிலில் செண்டை மேளம் அடித்த இசைக்கலைஞர்களை படத்தில் காணலாம்.

    சபரிமலையில் கோவில் நடை அடைத்த பிறகே பக்தர்கள் அங்க பிரதட்சணம்

    சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் கோவில் நடை சாத்திய பிறகு இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே அங்க பிரதட்சணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி பகல் 11.55 மணிக்கு மேல் நண்பகல் 1 மணிக்குள் ஐயப்பனுக்கு பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜைக்கு நாள் நெருங்குவதால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    நேற்று டிரம்ஸ் இசைக் கலைஞர் சிவமணி சபரிமலையில் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி நடத்தி பக்தர்களை மகிழ்வித்தார். பிறகு அவர், பயபக்தியுடன் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார்.

    மண்டல பூஜையின் போது சுவாமி ஐயப்பன் பாரம்பரிய தங்க நகைகள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அவருக்கான 420 பவுன் திருவாபரணங்கள் அனைத்தும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக உள்ளது.

    இங்கிருந்து தங்க நகைகள் ஊர்வலமாக சபரிமலை எடுத்துச் செல்லப்படும். வருகிற 22-ந்தேதி இதற்கான யாத்திரை தொடங்குகிறது. 25-ந்தேதி பகல் 12.30 மணிக்கு திருவாபரண ஊர்வலம் பம்பை சென்றடைகிறது. அங்கிருந்து சிறப்பு பூஜைகள் முடித்து மாலை 5 மணிக்கு சரங்குத்தி வழியாக சன்னிதானத்தை அடையும். அங்கு 18-ம் படியில் சபரிமலை மேல்சாந்தி மற்றும் தந்திரிகளிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும்.

    26-ந்தேதி மண்டல பூஜை யன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும்.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் ஐயப்பன் சன்னதில் அங்கபிரதட்சணம் செய்து வழிபாடு நடத்துவார்கள். பக்தர்கள் கூட்ட நெரிசலின்போது அங்க பிரதட்சணம் செய்வது இடையூறாக இருப்பதாக பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து சபரிமலை மேல்சாந்தி ஆலோசனையின்படி இன்று முதல் பக்தர்கள் கோவில் நடை சாத்திய பிறகு இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே அங்க பிரதட்சண வழிபாடு செய்ய முடியும்.

    மேலும் அங்க பிரதட்சணம் செய்யும் பக்தருடன் 2 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடி விட்டு தான் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். தற்போது பம்பை ஆற்றை கடக்க ஒரு பாலம் மட்டும் உள்ளது. பக்தர்கள் வசதிக்காக மேலும் 2 பாலங்கள் கட்டப்பட உள்ளது. அதே போல ஆற்றில் குளிக்க முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறுவர்கள் ஆகியோருக்கு தனியாக படித்துறைகளும் அமைக்கப்பட உள்ளது.

    மேலும் பம்பையில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இது தொடர்பான தீர்மானங்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிராயர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    அடுத்த ஆண்டு மண்டல பூஜைக்கு முன்பு இந்த ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×