என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே நாளில் ஆடிப்பெருக்கு - ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
    X

    ஒரே நாளில் ஆடிப்பெருக்கு - ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் 2 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

    இன்று ஆடிப்பெருக்குடன் ஆடி அமாவாசை மற்றும் குருப்பெயர்ச்சி விழாக்களும் சேர்ந்து வந்ததால் இன்று பவானி கூடுதுறையில் பெருவாரியான பக்தர்கள் குவிந்தனர்.
    ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    ஆனால் இன்று ஆடிப்பெருக்குடன் ஆடி அமாவாசை மற்றும் குருப்பெயர்ச்சி விழாக்களும் சேர்ந்து வந்ததால் இன்று பவானி கூடுதுறையில் பெருவாரியான பக்தர்கள் குவிந்தனர்.

    அதிகாலை 5 மணிக்கெல்லாம் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மக்கள் பவானி கூடுதுறைக்கு வர தொடங்கினர்.

    இவர்கள் பஸ்கள் மற்றும் கார், வேன்களில் வந்தனர். அதிகாலையிலேயே கூடு துறையில் குவிந்து புனித நீராடினர். அதன் பிறகு சங்கமேஸ்வரர் மற்றும் வேத நாயகி அம்மனை வழிபட்டனர்.



    வழக்கம் போல் புதுமண தம்பதிகளும் இன்று பவானி கூடுதுறைக்கு ஜோடி, ஜோடியாக வந்து குவிந்தனர். அவர்கள் புதுமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு காவிரி தாயை வழிபட்டனர்.

    மேலும் ஏராளமான பெண் பக்தர்கள் தங்கள் வீட்டில் வளர்த்து எடுத்து வந்த முளைப்பாரியை காவிரி ஆற்றில் விட்டு தங்கள் வாழ்வு சிறக்க வேண்டி கொண்டனர்.

    திருமணமான பெண்கள் பலர் காவிரியில் நீராடி புது தாலி கயிற்றை கட்டி கொண்டனர்.

    திருமண ஆகாத கன்னி பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டி கூடுதுறையில் நீராடி வழிபட்டனர்.

    இன்று ஆடி அமாவாசையையொட்டி பலர் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். இவர்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக அமர்ந்து பூஜை பொருட்கள் மற்றும் பிண்டங்கள் வைத்து பூஜை செய்து தர்ப்பணம் செய்தனர்.

    பிறகு அந்த பிண்டம் மற்றும் பூஜை பொருட்களை காவரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.



    ஆடிப்பெருக்கு– ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சிவக்குமார் தலைமையில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காவிரி ஆற்றில் குளிக்கும் போது யாராவது ஆழமான பகுதிக்கு சென்று சிக்கினால் அவர்களை காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பரிசல்களில் காவிரி ஆற்றில் ரோந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    மேலும் ஆழமான பகுதிக்கு யாரும் சென்று விட வேண்டாம் என ஒலி பெருக்கியில் அறிவித்த வண்ணமும் உள்ளனர்.

    கொடுமுடி மகுடேஸ் வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பள்ளி யறை பூஜை செய்யப்பட்டு 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனால் அதிகாலை 3 மணி முதலே ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர், காங்கயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

    இவர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் குளித்து மகுடேஸ்வரரை வழிப்பட்டனர். இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக சாமியை தரிசனம் செய்ய தடுப்பு கம்பிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    காவிரி கரையோரம் ஏராளமான பக்தர்கள் ஆற்றில் குளித்து விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மேலும் ஏராளமான பெண் பக்தர்கள் முளைப் பாரிகள் எடுத்து காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர். இதனால் அந்த பகுதியில் எங்கு பார்த்தாலும் பக்தர் களின் கூட்டம் அலை மோதியது. எப்போதும் இல்லாமல் இப்போது வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.
    Next Story
    ×