search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு
    X

    எங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு

    க்ரீன் பிட்ச் தந்து ஐசிசி எங்களை பாரபட்சம் பார்க்கிறது என்று ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
    உலகக்கோப்பையில் இலங்கை அணி முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தையும, 2-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் எதிர்கொண்டது. இந்த இரண்டு போட்டிகளும் கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. கார்டிப் ஆடுகளம் புற்கள் நிறைந்து பச்சை பசேல் என்று காட்சியளித்தது.

    இதனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருந்தது. ஆகையால் நியூசிலாந்துக்கு எதிராக 136 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது போட்டியிலும் திணறியது. ஆனால் மழை பெய்ததால் டக்வொர்த் விதிப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டதால் வெற்றி பெற்றது.

    அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிராகவும், வங்காள தேசத்திற்கு எதிராகவும் விளையாட இருந்த ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. இந்த இரண்டு ஆட்டங்களும் பிரிஸ்டோலில் நடைபெறுவதாக இருந்தது. பிரிஸ்டோல் ஆடுகளமும் பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இலங்கை அணி நாளை ஆஸ்திரேலியாவை லண்டன் ஓவல் மைதானத்தில் எதிர்கொள்கிறது. லண்டன் ஓவலில் 300 ரன்களுக்கு மேல் சர்வ சாதாரணமாக குவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எங்களுக்கு எதிரான போட்டிக்கான ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்படுவது போல் தெரிகிறது. இதனால் ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது என்று இலங்கை அணியின் மானேஜர் அஷாந்தா டி மெல் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அஷாந்தா டி மெல் கூறுகையில் ‘‘நாங்கள் விளையாடிய நான்கு போட்டிக்கான ஆடுகளங்களும் புற்கள் நிறைந்து காணப்பட்டது. ஐசிசி எங்களுக்காக ‘க்ரீன் பிட்ச்’ தயார் செய்துள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடியதில் இருந்து நாங்கள் இதை தெரிந்து கொண்டோம்.



    அதே மைதானத்தில் மற்ற அணிகள் மோதும் ஆடுகளங்கள் புற்கள் காய்ந்து, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கான ஆடுகளங்கள் க்ரீனாக உள்ளது. இதுபற்றி நாங்கள் புகார் அளிக்கிறோம். ஐசிசி நடத்தும் தொடரில் ஒரு குறிப்பிட்ட அணிக்கெதிராக மட்டும் ஒரு குறிப்பிட்ட ஆடுகளமும், மற்ற அணிகளுக்கு வேறுவிதமான ஆடுகளங்களும் தயார் செய்தது நியாயமானது அல்ல.

    கார்டிப் போட்டிக்கான பயிற்சியின்போது மூன்று வலைகளுக்குப் பதிலாக இரண்டு வலைகள் மட்டுமே தயார் செய்து தந்தனர். நாங்கள் தங்கிய ஓட்டலில் நீச்சல் குளம் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் ரிலாக்ஸ் ஆக நீச்சல் குளம் ஒவ்வொரு அணிகளுக்கும் தேவை. அதேவேளையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு பிரிஸ்டோலில் ஒதுக்கிய ஓட்டலில் நீச்சல் குளம் இருந்தது’’ என்றார்.

    இலங்கை அணி மானேஜரின் இந்த குற்றச்சாட்டுக்களை ஐசிசி முற்றிலும் மறுத்துள்ளது.
    Next Story
    ×