search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவிடம் இருந்து நமது பகுதியை மீட்பேன்... நேபாள முன்னாள் பிரதமரின் சர்ச்சை பேச்சு
    X

    நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி

    இந்தியாவிடம் இருந்து நமது பகுதியை மீட்பேன்... நேபாள முன்னாள் பிரதமரின் சர்ச்சை பேச்சு

    • சர்மா ஒலி தார்ச்சுலா மாவட்டத்தில் தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார்
    • இந்தியாவின் 3 பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து, சர்மா ஒலி தலைமையிலான அரசு வரைபடம் வெளியிட்டது.

    காத்மாண்டு:

    இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இம்மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி, தார்ச்சுலா மாவட்டத்தில் தனது கட்சியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நமது நிலத்தில் ஒரு அங்குலத்தை கூட விட்டு கொடுக்க மாட்டோம். எங்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால், காலாபானி, லிபுலெக், லிம்புயதுரா (இந்திய பகுதிகள்) உள்பட ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்டு கொண்டு வருவோம். எங்களது கட்சி, தேசத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா - நேபாள உறவுகள் நீண்ட காலமாக சுமூகமாகவே உள்ளது. ஆனால் நேபாளத்தின் பிரதமராக சர்மா ஒலி பதவியேற்ற பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டது.கே.பி.சர்மா ஒலி பிரதமராக இருந்தபோது அவரது அரசாங்கம் இந்தியாவின் 3 பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது.

    அப்பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டினார் சர்மா ஒலி. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்த நிலையில் கே.பி.சர்மா ஒலி இவ்விவகாரத்தை மீண்டும் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அதே போல் நேபாள காங்கிரஸ் தலைவரும், பிரதமருமான ஷேர் பகதூர் தியூபா தனது தேர்தல் பிரசாரத்தில் கூறும்போது, ராஜதநதிர முயற்சிகள், பரஸ்பர உறவுகளின் அடிப்படையில் நேபாளத்தின் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

    நேபாளத்துக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. சமீபத்தில் நேபாள பொது தேர்தலின்போது போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளுக்காக 200 வாகனங்களை இந்தியா அன்பளிப்பாக நேபாளத்துக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×