என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியா கொண்டு வரப்பட்ட ராணா: பாகிஸ்தான் சொல்வது என்ன?
    X

    இந்தியா கொண்டு வரப்பட்ட ராணா: பாகிஸ்தான் சொல்வது என்ன?

    • அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ராணா, இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளார்.
    • பாகிஸ்தான் நாட்டில் பிறந்த ராணா, கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவர்.

    இந்தியாவின் வர்த்தக மையமாக திகழும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தாஜ்ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹட்லியும் ஒருவர். லஷ்கர் இ தொய்பா என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இவரும், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணாவும் மும்பை தாக்குதலில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இந்த வழக்கில் தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்தது. இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.

    தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பல ஆண்டுகளாக கோரி வந்தது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இதற்கு ஒரு விடிவு காலம் பிறந்தது. ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என அறிவித்தார்.

    தன்னை நாடு கடத்தக்கூடாது என தஹாவூர் ராணா அமெரிக்க கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது கடைசி கட்ட முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ராணா இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். என்.ஐ.ஏ. அவரை கைது செய்து திகார் சிறையில் அடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ராணா குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. ராணா விசயத்தில் பாகிஸ்தான் விலகியே இருக்கும் பாகிஸ்தான் வெளியுறுத்துறை செய்தி தொடர்பாகளர் ஷஃப்கத் அலிகான் தெரிவித்துள்ளார்.

    மேலும் இது தொடர்பாக ஷஃப்கத் அலிகான் கூறியதாவது:-

    தஹாவூர் ராணா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தான் ஆவணங்களை புதுப்பிக்கவில்லை. கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்களுக்கு பாகிஸ்தான் இரட்டை குடியுரிமை வழங்காது. அவருடைய கனடா குடியுரிமை தெளிவாக உள்ளது.

    இவ்வாறு ஷஃப்கத் அலிகான் தெரிவித்துள்ளார்.

    ராணா மீது குற்றச்சதி, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தல், கொலை உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.

    Next Story
    ×