search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர்: யார் இந்த ரிஷி சுனக்?
    X

    ரிஷி சுனக் குடும்பம்

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர்: யார் இந்த ரிஷி சுனக்?

    • மது அருந்துதல் உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்.
    • இந்து மத பற்றாளர். அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பவர்.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமராகி, முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற புதிய சரித்திரத்தைப் படைத்திருக்கிறார், 42 வயதே ஆன ரிஷி சுனக்.

    இவர் 1980-ம் ஆண்டு, மே மாதம் 12-ந்தேதி இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டன் நகரில் பிறந்தார்.

    இவரது தந்தை கென்யாவில் பிறந்த யஷ்விர் சுனக், தாய் தான்சானியாவில் பிறந்த உஷா சுனக். இந்த தம்பதியரின் 3 குழந்தைகளில் மூத்தவர் ரிஷி சுனக். தம்பி சஞ்சய், மனநல டாக்டர், தங்கை ராக்கி, கல்விக்கான ஐ.நா.உலகளாவிய நிதியத்தில் பணி.

    இவரது பெற்றோரின் பூர்வீகம், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஆகும். யஷ்விர் சுனக், இங்கிலாந்து அரசின் என்.எச்.எஸ். டாக்டர். உஷா சுனக், சொந்தமாக மருந்துக்கடை நடத்துகிறார்.

    ரஷி சுனக், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் லிங்கன் கல்லூரியில் தத்துவம், அரசியல், பொருளாதாரம் (பிபிஇ) படித்து பட்டம் பெற்றார். அதையடுத்து ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து எம்.பி.ஏ. பட்டம் பெற்றார்.

    ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்தான் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அங்குதான் அவர் தனது காதல் மனைவி அக்‌ஷதாவை முதன் முதலாக சந்தித்தார். ரிஷியை போன்று அவரும் எம்.பி.ஏ. தான் படித்துக்கொண்டிருந்தார்.

    அங்கே அவர்கள் இருவர் இடையே காதல் மலர்ந்தது. தனது காதலரை அறிமுகம் செய்து தந்தையான 'இன்போசிஸ்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்திக்கு அக்‌ஷதா எழுதிய கடிதத்தில், "உங்களுக்கு அவரைப்பற்றி விவரிக்க வேண்டுமென்றால் அவர் புத்திசாலி, அழகானவர், மிக முக்கியமாக அவர் நேர்மையானவர்" என உருகி இருக்கிறார்.

    இந்த தம்பதியரின் திருமணம், 2009-ம் ஆண்டு பெங்களூருவில் நடந்தேறியது. 2 நாள் நடந்த மண விழாவில் 'விப்ரோ' நிறுவனர் அசீம் பிரேம்ஜி, கிரிக்கெட் வீரர் அனில்கும்ப்ளே, தொழில் அதிபர் நந்தன் நிலகேணி, பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனே என பல பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்தி இருக்கிறார்கள்.

    இந்த தம்பதியருக்கு கிருஷ்ணா, அனுஷ்கா என 2 செல்ல மகள்கள்.

    ரிஷி சுனக் அரசியலுக்கு வருவதற்கு முன்னால் முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாக்ஸில் 2001-04 இடையே பணியாற்றி இருக்கிறார். அதையடுத்து சில்ட்ரன்ஸ் முதலீட்டு நிதி நிர்வாகத்தில் பணியாற்றி உள்ளார். அமெரிக்காவில் கலிபோர்னியாவில் தனது முன்னாள் சகாக்களின் நிதி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

    2013-2015 இடையேயான காலத்தில் தனது மாமனார் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் கேட்டமரன் வெஞ்சர்ஸ் முதலீட்டு நிறுவனத்தின் இயக்குனராக இருந்துள்ளார்.

    மது அருந்துதல் உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், தனி மனித வாழ்வில் ஒழுக்கமானவர் என்பது ரிஷியின் குறிப்பிடத்தக்க நற்பண்புகள்.

    தினந்தோறும் காலையில் உடற்பயிற்சி செய்வது இவருக்கு பிடித்தமானது.

    இந்து மத பற்றாளர். அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பவர்.

    2015-ம் ஆண்டு ரிச்மாண்ட் தொகுதியில் இருந்து கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியை அந்த கட்சி 100 ஆண்டுகளுக்கு மேலாக தன் வசம் வைத்திருக்கிறது என்பது சிறப்பு தகவல்.

    2017-ம் ஆண்டு, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்தார்.

    2019-ல் அப்போதைய நிதி மந்திரி சாஜித் ஜாவித்தின் கீழ் கருவூல தலைமைச்செயலாளர் பதவி வகித்தார்.

    2020-ம் ஆண்டு போரிஸ் ஜான்சன் அரசில் நிதி மந்திரியாக பதவி வகித்தார். இந்த ஆண்டு போரிஸ் ஜான்சன் சர்ச்சைகளில் சிக்கியபோது, ரிஷி சுனக் நிதி மந்திரி பதவியை விட்டு விலகினார்.

    போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை விட்டு விலகியபோது, பிரதமர் பதவி போட்டியில் ரிஷி சுனக் குதித்தார். 'நீயா, நானா?' என்கிற அளவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தினார். ஆனால் இறுதி வாக்கெடுப்பில் அவர் லிஸ் டிரஸிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார்.

    இங்கிலாந்தில் 'மினி பட்ஜெட்' தாக்கல் செய்து அந்த நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவுகள் ஏற்பட்டு லிஸ் டிரஸ், வெறும் 45 நாட்களே பதவி வகித்த நிலையில், கடந்த 20-ந் தேதி ராஜினாமாவை அறிவித்தார்.

    மீண்டும் பிரதமர் பதவிக்கு குறிவைத்து, கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவி போட்டியில் இறங்கினார், ரிஷி சுனக். போட்டியில் குதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போரிஸ் ஜான்சன் கடைசி நேரத்தில் பின்வாங்க, இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் மக்கள் சபை தலைவர் பென்னி மார்டண்ட் போட்டியிடத்தேவையான 100 எம்.பி.க்கள் ஆதரவை திரட்ட முடியாமல் போக, ரிஷி சுனக் வெற்றிக்கனியைப் பறித்தார்.

    இந்த ஆண்டின் தீபாவளி பரிசு, அவருக்கு கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவி.

    அப்போது அவர் சொன்னது- "இங்கிலாந்து மாபெரும் நாடு. ஆனால் நாம் மிகப்பெரிய பொருளாதார சவாலை சந்தித்து வருகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை. நமக்கு இப்போது தேவை ஸ்திரத்தன்மையும், ஒற்றுமையும்தான். நமது கட்சியையும், நாட்டையும் ஒன்றிணைத்து அழைத்துச்செல்வதற்கு நான் அதிக முக்கியத்துவம் தருவேன். ஏன் என்றால் நாம் தற்போதைய சவால்களை சந்தித்து, நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு சிறந்த, வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு ஒரே வழி இதுதான்" என்பதாகும்.

    நேற்று லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லசை லிஸ் டிரஸ் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதையடுத்து ரிஷி சுனக், மன்னரை சந்தித்து பேசினார். அப்போது அவரை நாட்டின் பிரதமராக நியமிக்கும் உத்தரவை மன்னர் சார்லஸ் வழங்கினார். அவர் நியமித்துள்ள முதல் பிரதமர் ரிஷி சுனக்தான். இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆகி இருக்கிறார் ரிஷி சுனக்.

    1783-ம் ஆண்டு அந்த நாட்டில் வில்லியம் பிட் மிக இளம் வயது பிரதமர் என்ற பெயரைப்பெற்றிருந்தார். அதன் பின் இந்த ஆண்டு நமது ரிஷி சுனக் மிக இளைய வயது பிரதமர் ஆகி வரலாற்றைத் திருப்பிப்போட்டிருக்கிறார். வில்லியம் பிட்டின் வயதையும் திருப்பிப்போட்டிருக்கிறார். ஆமாம் அவருக்கு வயது 24. இவருக்கு வயது '42'.

    தனது மருமகன் ரிஷி சுனக் பிரதமராகிறார் என அறிந்த உடன் அவரை வாழ்த்தி மாமனார் என்.ஆர்.நாராயணமூர்த்தி சொன்ன வார்த்தைகள் இவை-

    "வாழ்த்துகள் ரிஷி. நாங்கள் உங்களால் பெருமிதம் அடைகிறோம். நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம். நீங்கள் இங்கிலாந்து மக்களுக்கு தன்னாலான ஆகச்சிறந்ததை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது."

    ஆமாம், அந்த நம்பிக்கையில்தான் ரிஷி சுனக்கை இங்கிலாந்து தனது பிரதமர் ஆக்கி அழகு பார்க்கிறது.

    Next Story
    ×