search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன் போரில் இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் 2 பேர் பலி
    X

    உக்ரைன் போரில் இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் 2 பேர் பலி

    • தன்னார்வ உதவி ஊழியர்கள் பலர் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு சென்று அந்த நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.
    • இருவரும் போரில் இறந்துவிட்டதாக அவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

    லண்டன்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 11 மாதங்களுக்கும் மேலாக போர் நடத்தி வருகிறது. இந்த போர் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை பறித்ததோடு, லட்சக்கணக்கான மக்களை அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புக செய்துள்ளது. கல்வி, வேலை மற்றும் பிற தேவைகளுக்காக உக்ரைனுக்கு சென்ற வெளிநாட்டினர் பெரும்பாலானோர் போர் தொடங்கியதும் அங்கிருந்து வெளியேறினர். அதே சமயம் வெளிநாடுகளை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் பலர் போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு சென்று அந்த நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிறிஸ் பாரி மற்றும் ஆண்ட்ரூ பாக்சா ஆகிய இரு தன்னார்வ உதவி ஊழியர்கள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உக்ரைனில் தன்னார்வ பணிகளை மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக இவர்கள் இருவரும் போர் முனையில் சிக்கும் பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணிகளை செய்து வந்தனர். அந்த வகையில் கிழக்கு உக்ரைனின் சோலேடார் நகரில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கிறிஸ் பாரி, ஆண்ட்ரூ பாக்சா ஆகிய இருவரும் கடந்த 6-ந் தேதி திடீரென மாயமாகினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் அவர்கள் இருவரும் போரில் இறந்துவிட்டதாக அவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன. சோலேடார் நகரில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களது கார் மீது பீரங்கி குண்டு வீசப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் இங்கிலாந்து குடிமக்கள் யாரும் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளது.

    Next Story
    ×