search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஸ்பெயின்: நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி
    X

    ஸ்பெயின்: நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி

    • ஏற்கனவே சட்டம் உள்ளது, ஆனால் எதிர்ப்பு கிளம்பியதால் அமல்படுத்தவில்லை
    • பாலினம், மத நம்பிக்கைகள், உடை உட்பட எந்தவொரு பாகுபாட்டிற்கு எதிராகவும் மக்களை பாதுகாக்க வேண்டும்

    ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற ஒரு பிராந்தியம் கட்டலோனியா. இதன் தலைநகரமான பார்சிலோனா உலகில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று.

    கட்டலோனியாவில் பொது நீச்சல் குளங்களில் பெண்களை மேலாடையின்றி செல்ல நகரம் மற்றும் நகர அரங்குகளுக்கு உத்தரவிட்டதையடுத்து கட்டலோனியாவில் ஆர்வலர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

    பெண்கள் மேலாடையின்றி செல்ல 2020-ம் ஆண்டே கட்டலோனியா அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், சில நகராட்சி நீச்சல் குளங்கள் இந்த நடைமுறையைத் தடுத்துள்ளன என ஒவ்வொரு கோடை காலத்திலும் பத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்த வண்ணம் இருந்திருக்கிறது.

    இதனை தடுக்கும் வகையில், எந்த வகையான பாரபட்சத்தையும் தடுக்க, உள்ளூர் அதிகாரிகளுக்கு இப்போது உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    கட்டலோனியா அரசாங்கத்தின் சமத்துவம் மற்றும் பெண்ணியம் துறை அவர்களுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், பெண்கள் மேலாடையின்றி செல்வதைத் தடுப்பது, அவரவர்களின் உடல் தொடர்பாக ஒவ்வொரு நபரின் தேர்வுக்கான சுதந்திரத்தையும் மீறுவதும், மக்கள் தொகையில் இருந்து விலக்கி வைப்பதுமாகும்.

    பாலினம், மத நம்பிக்கைகள், உடை உட்பட எந்தவொரு பாகுபாட்டிற்கு எதிராகவும் உள்ளூர் அதிகாரிகள் மக்களை பாதுகாக்க வேண்டும். தாய்ப்பாலூட்டுவதை அனுமதிக்க வேண்டும். முழு உடலையும் மறைக்கும் நீச்சல் உடைகளை பயன்படுத்துவதையும் அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கை கூறியிருக்கிறது.

    கட்டலோனியா பிராந்தியத்தின் சமத்துவத் துறையின் செய்தித் தொடர்பாளர், இந்த கடிதம் வெறுமனே ஒரு நினைவூட்டல் என்றும், இருப்பினும், இனிமேல் நகராட்சிகள் இதற்குக் கீழ்ப்படிவது கட்டாயமாகும் என்று கூறியிருக்கிறார்.

    கட்டலோனியா பிராந்திய அரசாங்கத்தை, சுதந்திரத்திற்கு ஆதரவான கட்டலோனியா குடியரசுக் கட்சி (இடது) ஆண்டு வருகிறது. தற்போது கூறப்பட்டிருக்கும் உத்தரவுகளின்படி, "டவுன் ஹால்" எனப்படும் மக்கள் கூடும் நகர மண்டபங்களில் உள்ள நீச்சல் குளங்களில் இந்த விதிமுறைகள் மீறப்பட்டால், சுமார் ரூ. 4 கோடி வரை அபராதம் விதிக்கப்படும்.

    மேலாடையின்றி செல்ல அனுமதிக்கப்படாத டவுன் ஹால்களுக்கு எதிரான புகார்களில், பெரும்பான்மையானவை முக்ரான் லியுர்ஸ் (Mugron Lliures) என்ற பெண்ணியக் குழுவைச் சேர்ந்தவர்களால் பதிவு செய்யப்பட்டவை.

    இந்த குழுவின் செய்தித்தொடர்பாளர் மரியோனா டிராபல் இது குறித்து கூறியதாவது:-

    இது ஒரு பாலின சமத்துவப் பிரச்சினை. ஆண்கள் (மேலாடையின்றி) செல்லலாம், ஆனால் பெண்களால் முடியாது என்கிற நிலையிருக்கிறது. இதனை சரி செய்ய அவர்கள் (அதிகாரிகள்) ஏன் இவ்வளவு நேரம் எடுத்தார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் தற்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்ற வாரம், முர்சியா எனும் தெற்கு பகுதி நகரத்தில் நடைபெற்ற பிரைட் எனும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள், பாடகர் ரோசியோ சைஸ், மேலாடையின்றி மேடையில் ஏறிய பிறகு, ஒரு கொடியால் அவரது உடற்பகுதியை மூடினர். அவரது நிகழ்ச்சிக்கு பிறகு, உள்ளூர் காவல்துறையினரால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

    ஸ்பெயின் நாட்டில், நீச்சல் குளங்களில் மேலாடையின்றி செல்ல பெண்களுக்கான அனுமதி குறித்த விவாதங்கள், அந்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசுபொருள் ஆன செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×