search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஸ்காட்லாந்து முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் ராஜினாமா அறிவிப்பு
    X

    ஸ்காட்லாந்து முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் ராஜினாமா அறிவிப்பு

    • கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் நீடிப்பதாக தகவல்
    • நிகோலா ஸ்டர்ஜன் நாட்டிற்கு செய்த நீண்ட கால சேவைக்கு பிரதமர் ரிஷி சுனக் நன்றி தெரிவித்தார்.

    லண்டன்:

    பிரிட்டனின் ஸ்காட்லாந்து மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நிகோலா ஸ்டர்ஜன் (வயது 53). ஸ்காட்லாந்து முதல் மந்திரியாக பதவி வகித்த முதல் பெண் மற்றும் நீண்ட காலம் பணியாற்றிய முதல் மந்திரி என்ற பெருமை பெற்ற இவர், ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக இன்று அறிவித்துள்ளார். ஆளுங்கட்சியான ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நிகோலா ஸ்டர்ஜன் கூறியதாவது:-

    8 ஆண்டுகள் ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்கு தலைமை தாங்கிய பிறகு, பதவி விலகுவதற்கு சரியான நேரம் இது. இப்போது பதவி விலகுவதே எனக்கும், எனது கட்சிக்கும், நாட்டுக்கும் சரியானது. திருநங்கைகளின் உரிமைகள் பிரச்சனை பற்றி கட்சிக்குள் நிலவும் பிளவுகள் இருந்தாலும், இதன் காரணமாக பதவி விலகும் முடிவை எடுக்கவில்லை.

    கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் நீடிப்பேன். அத்துடன், 2026ல் பாராளுமன்ற தேர்தல் வரை ஸ்காட்லாந்து பாராளுமன்ற உறுப்பினராக இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல் மந்திரி நிகோலா ஸ்டர்ஜன் நாட்டிற்கு செய்த நீண்ட கால சேவைக்கு நன்றி தெரிவிப்பதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறி உள்ளார். இதேபோல் மேலும் சில தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

    ஸ்காட்லாந்தில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் முக்கிய தலைவர் வெளியேறுவதால், கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகள் இழந்த செல்வாக்கை பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

    ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்காக நிகோலா ஸ்டர்ஜன் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×