search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு
    X

    ரஷிய அதிபர் புதினுடன் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்

    லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

    • உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5வது மாதமாக நீடிக்கிறது.
    • உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மற்றும் அரசு பொது வழக்கறிஞரை அதிபர் ஜெலன்ஸ்கி நீக்கினார்.


    Live Updates

    • 20 July 2022 4:45 PM GMT

      உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா இன்று அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்களிடையே உரையாற்றினார். அப்போது, உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்த உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தற்போது வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

      “துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதம் தொடர்கிறது. இந்த போரில் கொல்லப்பட்டவர்கள் சார்பாகவும், கை கால்களை இழந்தவர்கள் சார்பாகவும், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் சார்பாகவும், போர் நடைபெறும் முன்களப் பகுதியில் இருந்து தங்கள் குடும்பத்தினர் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். நான் கேட்க விரும்பாத ஒன்றைக் கேட்கிறேன், ஆயுதங்களைக் கேட்கிறேன்” என்று உருக்கமாக பேசினார் ஒலனா ஜெலன்ஸ்கா.

    • 20 July 2022 1:50 PM GMT

      சிரியா தனது நெருங்கிய நட்பு நாடான ரஷியாவுக்கு ஆதரவாக உக்ரைனுடனான உறவை துண்டிப்பதாக இன்று அறிவித்துள்ளது. இது உக்ரைனின் நடவடிக்கைக்கு பதிலடி என்றும் கூறி உள்ளது.

      உக்ரைனில் உள்ள இரண்டு பிரிவினைவாத பகுதிகளான டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்ததால் சிரியாவுடனான உறவை துண்டிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட 3 வாரங்களுக்குப் பிறகு சிரியா பதிலடி கொடுத்துள்ளது.

    • 20 July 2022 9:59 AM GMT

      உக்ரைன் மீதான போருக்கு பிறகு புதின் முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது அவர், "உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் உதவுவோம். ஆனால் ரஷிய தானிய ஏற்றுமதிக்காக விமான விநியோகம் தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட வேண்டும். உலக சந்தைகளுக்கு ரஷிய உரங்களை வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளனர். அது போன்று சர்வதேச உணவு சந்தைகளில் நிலைமையை மேம்படுத்த அவர்கள் உண்மையாக விரும்பினால் ரஷிய தானியங்களின் ஏற்றுமதி மீதான தடையை மேற்கத்திய நாடுகள் நீக்க வேண்டும். உலகில் இருந்து ரஷியாவை தனிமைப்படுத்த விரும்பும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி, சிறிது அளவு கூட சாத்தியமற்றது" என்று குறிப்பிட்டார்.

    • 20 July 2022 1:01 AM GMT

      அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், அதிபர் புதினின் ஈரான் பயணம் உலக அரங்கில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

      புதினும் ரஷியாவும் எந்த அளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது. இப்போது ​​அவர்கள் உதவிக்காக ஈரானிடம் திரும்ப வேண்டும். ஈரானிடம் இருந்து ராணுவ டிரோன்களை நாடுகிறது. ஈரானிடம் இருந்து ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களைக் கோருவதன் மூலம், உக்ரைனில் நடக்கும் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் அதிபர் புதின் தீவிரம் காட்டவில்லை என தெரிவித்தார்.

    • 19 July 2022 7:41 PM GMT

      அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளில் ரஷியாவின் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் ரஷியா, உக்ரைன் போர் ஏற்பட்ட பிறகு 1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

    • 19 July 2022 1:15 AM GMT

      ரஷியா நடத்தி வரும் போரில் இருந்து உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,752 பேர் காயம் அடைந்துள்ளனர். உக்ரைன் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கூறி உள்ளது.

    • 18 July 2022 10:05 PM GMT

      உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில், ரஷியா இதுவரை 3000-க்கு மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. குரூஸ் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர அமைப்பின் ஓனிக்ஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது என தெரிவித்துள்ளது.

    • 18 July 2022 10:18 AM GMT

      டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள டோரெட்ஸ்க் நகரின் மீது ரஷியா இன்று குண்டுகளை வீசி நடத்திய தாக்குதலில், பொதுமக்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு மாடி வீட்டின் இடிபாடுகளில் இருந்து ஐந்து உடல்களை மீட்புப் படையினர் மீட்டனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைனை ஆக்கிரமித்த ரஷியா, வேண்டுமென்றே பொதுமக்களை குறிவைப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் ரஷியா இதை மறுத்து வருகிறது. 

    • 18 July 2022 10:08 AM GMT

      உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் முற்றுகையிட்டிருப்பதால், பட்டினியால் பாதிக்கப்படக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு தானிய விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இதை முடிவுக்கு வர வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பாரெல் எச்சரித்துள்ளார்.

    • 18 July 2022 8:53 AM GMT

      உக்ரைனின் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் பீரங்கி ஆயுதங்களை அழிப்பதில் கவனம் செலுத்தும்படி படைத் தலைவர்களுக்கு ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு உத்தரவிட்டார்.

      நீண்ட தூர இலக்குகளை தாக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் மூலம் ரஷியாவின் வெடிமருந்து கிடங்குகள், எரிவாயு சப்ளை லைன்களை உக்ரைன் படைகள் தாக்கின. இதனால் போர் நடைபெறும் முன்களப் பகுதிக்கு எரிபொருள் மற்றும் வெடிமருந்துகளை எவ்வாறு வழங்குவது என்பதை ரஷியா ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, உக்ரைனின் நீண்டதூர ஆயுதங்களை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

    Next Story
    ×