search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    எங்களை குற்றவாளிகளாக நடத்துவதா? - காவல்துறைக்கு எதிராக வழக்கு
    X

    "எங்களை குற்றவாளிகளாக நடத்துவதா?" - காவல்துறைக்கு எதிராக வழக்கு

    • சுமார் 30 லட்சம் அயல்நாட்டினர் ஜப்பானில் வசிக்கின்றனர்
    • எங்களை ஜப்பானியராக பார்க்காமல் குற்றவாளிகளாக நடத்துகின்றனர் என்றார் சையத்

    சமீப சில ஆண்டுகளாக அயல்நாடுகளிலிருந்து பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு ஜப்பானிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஜப்பானில் வசிக்கும் ஜப்பானியர் அல்லாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 லட்சம் எனும் அளவை எட்டியுள்ளது.

    இந்நிலையில், ஜப்பான் காவல்துறை, அங்கு வாழும் அயல்நாட்டினரை, இனத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டி நடத்துவதாக அந்நாட்டில் வாழும் சிலர், சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    அயல்நாட்டினரில் ஒரு சிலரிடம் இனப்பாகுபாடு காட்டுவதாகவும், இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரி இந்திய வம்சாவளியை சேர்ந்த மேத்யு (Matthew), ஆப்பிரிக்க-அமெரிக்கரான மாரிஸ் (Maurice) மற்றும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சையத் ஜைன் (Syed Zain) எனும் 3 பேர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

    டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

    26 வயதான சையத், "நான் ஒரு ஜப்பானிய குடிமகன். ஆனால், காவல்துறையினர் என்னை பலமுறை தடுத்து நிறுத்தி எனது இன விவரக்குறிப்பை கேட்கின்றனர். எனது வீட்டின் முன் தேவையற்ற முறையில் என்னை சோதனை செய்தனர். எங்களை ஒரு ஜப்பானியராக காவல்துறையினர் அடையாளம் காண்பதில்லை; ஒரு குற்றவாளியை போல் நடத்துகிறார்கள்" என குற்றம் சாட்டினார்.

    இரண்டு தசாப்தங்களாக ஜப்பானில் வசித்து வரும் சையத், ஜப்பானிய பள்ளிகளில் பயின்று, அந்த மொழியில் சரளமாக பேசக்கூடியவர்.

    வழக்கு தொடர்ந்துள்ள மூவரும் சுமார் ரூ.16.5 லட்சம் ($20,000) நஷ்ட ஈடு கோரியுள்ளனர்.

    இது போன்ற வழக்கு ஜப்பானில் தாக்கல் செய்யப்படுவது இப்போதுதான் முதல் முறை என மூவரின் வழக்கறிஞர் மொடோகி டானிகுசி தெரிவித்தார்.

    Next Story
    ×