search icon
என் மலர்tooltip icon

  உலகம்

  பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றடைந்தார்
  X

  பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றடைந்தார்

  • பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார்.
  • அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மற்றும் பிரான்ஸ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். தலைநகர் பாரிசுக்கு சென்றடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

  அங்கு இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்னர் எலிசி அரண்மனையில் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆர் ஹானர் விருதை வழங்கினார்.

  நேற்று பிரான்ஸ் தேசிய தினத்தையொட்டி பாரிஸ் நகரில் நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவருக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான், பாரம்பரிய அணிவகுப்பின் சிறப்புகளை விளக்கி கூறினார்.

  இந்த அணிவகுப்பில் இந்திய முப்படைகளை சேர்ந்த 269 வீரர்கள் கொண்ட குழுவும் கலந்து கொண்டது. மேலும் பிரான்ஸ் ஜெட் விமானங்களுடன் சேர்ந்து இந்திய விமானப்படையின் ரபேல் விமானங்களும் சாகசம் நிகழ்த்தின.

  பின்னர் மோடி-மெக்ரான் இருவரும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

  விண்வெளி, ராணுவம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரான்சில் இருந்து 26 ரபேல் விமானங்களும் கூடுதலாக மூன்று ஸ்கார்பின் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

  பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது மோடி கூறியதாவது:-

  ராணுவ தளவாடங்களை கூட்டாக உற்பத்தி செய்து நட்பு நாடுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு, புவி வெப்ப நிலையை கண்காணித்து இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்தப்படும். விண்வெளி சார்ந்த கடல்சார் பாதுகாப்பிலும் இணைந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

  உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா விரும்புகிறது என்றார்.

  அதன் பின்னர் பிரதமர் மோடி, பிரான்ஸ் மற்றும் இந்திய தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளின் இந்த மகத்தான பயணத்தை விரைவுபடுத்தவும், வலுப்படுத்தவும் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.

  இந்தியா வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்துமாறும் வலியுறுத்தினார்.

  பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இரவு விருந்து அளித்தார். பின்னர் மோடி பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு புறப்பட்டார். அவருக்கு விமான நிலையத்தில் பிரான்ஸ் அரசு சார்பில் வழியனுப்பு நிகழ்ச்சி நடந்தது.

  பிரான்சில் இருந்து புறப்படுவதற்கு முன்பு பிரதமர் மோடி டுவிட்டரில் கூறும்போது, இந்த பிரான்ஸ் பயணம் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால் மேலும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.

  அணிவகுப்பில் இந்திய குழு பெருமை சேர்த்ததை பார்த்தது அருமையாக இருந்தது. அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்கு பிரான்ஸ் அதிபர் மெக்ரான் மற்றும் பிரான்ஸ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-பிரான்ஸ் நட்புறவு தொடரட்டும் என்றார்.

  ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இன்று பிரதமர் மோடி சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார்.

  ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சமீத் அல் ரஹ்யானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை கூறும்போது, ' இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விரிவான மூலோபாய கூட்டாண்மை சீராக வலுவடைந்து வருகிறது. மேலும் பிரதமரின் வருகை, ஆற்றல், கல்வி, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, பின்டெக், பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் போன்ற பல்வேறு துறைகளில் இதை முன்னெடுத்து செல்வதற்கான வழிகளை அடையாளம் காண்பதற்கான வாய்ப்பாக அமையும்' என்று தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்ப டுகிறார்.

  Next Story
  ×