என் மலர்
உலகம்

ஆபரேசன் சிந்தூர் : இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் பிரதமர்
- இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
- பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், நாட்டு மக்களுக்கு தொலைகாட்சியில் உரை யாற்றினார். அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்றத்தில் இருந்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
"பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இந்தியா தவறு செய்துவிட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். இந்தியாவின் தாக்குதல்கள் கோழைத்தனமானது.
பாகிஸ்தான் பின்வாங்கும் என்று இந்தியா நினைத்திருக்கலாம், ஆனால் தங்கள் நாட்டிற்காகப் போராடத் தெரிந்த ஒரு நாடு பாகிஸ்தான் என்பதை இந்தியா மறந்துவிட்டது. இந்தியாவின் தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 46 பேர் காயமடைந்த னர். இங்கு பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நாங்கள் பழிவாங்குவோம் என்று நான் உறுதியளிக்கிறேன்.
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை. ஆனால் பாகிஸ்தான் மீது இந்தியா தவறான காரணங்களுக்காக குற்றம் சாட்டியது. குற்றம் சாட்டுவதற்கு முன்பு, விசாரணை நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினோம். ஆனால் அதை இந்தியா ஏற்கவில்லை.
இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. ஒரு மணி நேர வான்வழிப் போரில் நமது விமானிகள் எதிரிகளின் ஜெட் விமானங்களை வெடிக்கச் செய்தனர். எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் தொடர்ச்சியான சண்டை நடந்து வருகிறது. அங்கு பாகிஸ்தான் ராணுவம் தங்கள் துணிச்சலைக் காட்டிப் போராடி வருகிறது.
எனது பாகிஸ்தான் மக்களே உங்கள் சொந்த பாதுகாப்பிற்காக, நமது ராணுவத்துக்கு எப்போதும் ஒற்றுமையாக இருப்போம். நாம் நிச்சயமாக அவர்களை (இந்தியாவை) எதிர்த்து நின்று வெற்றி பெறுவோம். நாட்டின் பாதுகாப்பிற்காக, பாகிஸ்தான் மக்களின் தைரியம் எனக்கு தேவை" என்று பேசினார்.






