search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஸ்பெயினில் வேகமாக பரவும் காட்டுத்தீ.. லா பால்மா தீவில் இருந்து 2500 மக்கள் வெளியேற்றம்
    X

    ஸ்பெயினில் வேகமாக பரவும் காட்டுத்தீ.. லா பால்மா தீவில் இருந்து 2500 மக்கள் வெளியேற்றம்

    • சுமார் 11000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் கருகின.
    • ஸ்பெயினில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 500 முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. நேற்று காலையில் பன்டகோர்டா மாவட்டத்தில் முதலில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் பிற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால் மக்கள் பீதியடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். விமானப்படை விமானம் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. எனினும் தீ கட்டுக்குள் வரவில்லை. சுமார் 11000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் கருகின.

    தீப்பற்றிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்படுகின்றனா. லா பால்மா தீவில் இருந்து மட்டும் 2500 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவசரகால சேவைகள் தங்கள் பணிகளை எளிதில் செய்து முடிக்க ஏதுவாக மீட்பு பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வெளியேறும்படி லா பால்மா கவுன்சிலின் தலைவரும், தீவின் முக்கிய அதிகாரியுமான செர்ஜியோ ரோட்ரிக்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

    தீ மிக விரைவாக பரவியதாக கேனரி தீவுகளின் பிராந்திய அரசாங்க தலைவர் பெர்னாண்டோ கிளாவிஜோ கூறினார். காற்று, பருவநிலை மற்றும் வெப்ப அலைகள் காரணமாக இந்த அளவுக்கு தீ பரவி வருவதாக அவர் தெரிவித்தார்.

    ஐரோப்பிய காட்டுதீ தகவல் அமைப்பின் தரவுகளின்படி, ஸ்பெயினில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 500 முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் 300,000 ஹெக்டேர்களுக்கு அதிகமான நிலம் நாசமானது. இது ஐரோப்பாவின் மிக மோசமான பாதிப்பாக கருதப்படுகிறது.

    இந்த ஆண்டு இதுவரை காட்டுத்தீயில் 66,000 ஹெக்டேர் நிலம் அழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×