என் மலர்
உலகம்

மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதி கைது: நோபல் கமிட்டி கண்டனம்
- கடந்த 2023-ம் ஆண்டு நர்கெஸ் முகமதிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
- நர்கெஸ் முகமதி கைதுக்கு பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
ஓஸ்லோ:
ஈரான் நாட்டில் பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர் நர்கெஸ் முகமதி. குறிப்பாக, ஈரானில் பெண்களின் உரிமைகளை பறிக்கும் கட்டாய ஹிஜாப் சட்டங்களுக்கு எதிராகவும், பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதை ஆதரித்தும் அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்.
அவருடைய மனித உரிமைகளுக்கான சேவையைப் போற்றும் விதமாக அவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, வழக்கறிஞர் ஒருவரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதி சென்றார். அப்போது ஈரான் அதிகாரிகள் நர்கெஸ் முகமதியை பலவந்தமாக கைது செய்ததாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.
இச்சம்பவம் சர்வதேச அளவில் சர்ச்சையைக் கிளப்பியது. அவரது கைதுக்கு ஐ.நா.சபை உள்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஈரான் மனித உரிமைப் போராளியான நர்கெஸ் முகமதி கைது செய்யப்பட்டதற்கு நோபல் பரிசு கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நோபல் பரிசு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், நர்கெஸ் முகமதி கைது வருத்தத்தை அளிக்கிறது. எந்த நிபந்தனையும் இன்றி அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.






