என் மலர்tooltip icon

    உலகம்

    ஈகுவடாரில் டீசல் மானியம் ரத்து: அதிபருக்கு எதிராக போராட்டம் வலுத்ததால் அவசர நிலை அறிவிப்பு
    X

    ஈகுவடாரில் டீசல் மானியம் ரத்து: அதிபருக்கு எதிராக போராட்டம் வலுத்ததால் அவசர நிலை அறிவிப்பு

    • டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
    • போராட்டக்காரர்களின் அழுத்தத்துக்கு அரசாங்கம் அடிபணியாது.

    குயிட்டோ:

    தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பட்ஜெட்டில் பல்வேறு செலவினங்களை அரசாங்கம் குறைத்துள்ளது.

    அந்தவகையில் டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்வதாக அதிபர் டேனியல் நோபோவா அறிவித்தார். இதனால் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரித்தது.

    இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. எனவே டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    அதேசமயம் அதிபர் டேனியல் நோபோவாவின் ஆதரவாளர்களும் அங்கு அதிகளவில் திரண்டனர். அப்போது அதிபருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி அங்கிருந்த பூங்காவுக்குள் நுழைய முயன்றனர்.

    இதனால் ஏற்பட்ட வன்முறையில் பலருக்கு காயம் ஏற்பட்டது. எனவே போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து அதிபர் டேனியல் நோபோவா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போராட்டக்காரர்களின் அழுத்தத்துக்கு அரசாங்கம் அடிபணியாது. மேலும் போராட்டத்தில் வன்முறையை கையில் எடுப்பவர்கள் குற்றவாளியாகவே கருதப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    எனினும் அதிபருக்கு எதிரான போராட்டம் பல இடங்களில் தீவிரமடைந்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாகாணங்களில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்கள் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளன.

    Next Story
    ×