search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.
    X
    போராட்டக்காரர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.

    இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு

    கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் நேற்று 50-வது நாளை எட்டியதையடுத்து கண்டன பேரணிகளை நடத்தினர்.
    கொழும்பு, மே. 29-

    இலங்கை பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் நிலையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று கடந்த மாதம் 9-ந்தேதி முதல் போராட்டத்தை தொடங்கினர்.

    அதிபர் மாளிகை முன்பு காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகி விட்ட நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

    அவர் பதவி விலக கோரி போராட்டம் தொடருகிறது. இதற்கிடையே கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் நேற்று 50-வது நாளை எட்டியதையடுத்து கண்டன பேரணிகளை நடத்தினர்.

    மேலும் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை நோக்கி சென்றனர். அவர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். ஆனாலும் போராட்டக்காரர்கள் தடையை மீறி முன்னேறினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் பேரணியாக வந்தவர்களை கலைத்து, நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதையும் படியுங்கள்.. உக்ரைனுக்கு ஆயுதங்கள் விநியோகம்: பிரான்ஸ்- ஜெர்மனி நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை
    Next Story
    ×