search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஷபாஸ் ஷெரீப்
    X
    ஷபாஸ் ஷெரீப்

    பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்- நாளை தேர்வாகிறார்

    இம்ரான் கான் அரசு கவிழ்ந்ததையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமர் நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பங்களுடன் நேற்று நள்ளிரவு இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான் கான் அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்று கூறி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்தன.

    கடந்த 3-ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அன்று, சட்டசபையை நடத்திய துணை சபாநாயகர், தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்தார்.

    வெளிநாட்டு சக்தி தூண்டுதலால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

    இவ்விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது. மேலும் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசு, மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    ஏற்கனவே இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. முக்கிய கூட்டணி கட்சியான முத்தாஹிதா குவாமி இயக்கம் கட்சி தனது ஆதரவை வாபஸ் வாங்கியதால் அரசின் பலம் 164 ஆக குறைந்தது. மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த 22 எம்.பி.க்கள் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்தனர்.

    சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு படி நேற்று காலை பாராளுமன்றம் பரபரப்பான சூழலில் கூடியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள். சபைக்கு வந்திருந்த நிலையில் பிரதமர் இம்ரான் கான் வரவில்லை. இம்ரான்கான் கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்- இ-இன்சாப்பை சேர்ந்த 51 எம்.பி.க்கள் பங்கேற்றனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் ‌ஷபாஸ் ஷெரீப், வெளியுறவு மந்திரி ஷாமக் மூத்குரேஷி பேசினார்கள்.

    பின்னர் சபையை பகல் 12.30 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஆசாத் குவைசர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டதால் சபை மீண்டும் கூடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இப்தார் நோன்பு திறப்புக்காக அவை நடவடிக்கைகளை இரவு 7.30 மணிவரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். நோன்பு திறப்புக்கு பிறகு சபை மீண்டும் கூடியபோது உடனடியாக இரவு 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு இரவு தொழுகைக்கு பிறகு மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இரவில் நடந்தது. அதில் இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்று முடிவு எடுக்கப்பட்டது

    அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் அரங்கேறிய நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

    இதையடுத்து எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த அயாஸ் சாதிக் அவைக்கு தலைமை தாங்கினார். அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடவடிக்கைகளை தொடங்கினார். நள்ளிரவு 1.30 மணிக்கு இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடந்தது.

    342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஆட்சியை காப்பாற்ற இம்ரான் கானுக்கு 172 பேரின் ஆதரவு தேவை. அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 174 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இம்ரான் கான் கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. அதே போல அதிருப்தி எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை.

    இதன்மூலம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். அவரை பதவியில் இருந்து நீக்கி பாராளுமன்றம் உத்தரவிட்டது.

    இம்ரான் கான் அரசு கவிழ்ந்ததையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமர் நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது. சபைக்கு தலைமை தாங்கிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த அயாஸ் சாதிக் கூறும்போது, ‘புதிய பிரதமருக்கான வேட்புமனுக்கள் இன்று மதியம் 2 மணிக்குள் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் பிற்பகல் 3 மணிக்குள் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

    நாளை காலை 11 மணிக்கு அமர்வை கூட்டி உள்ளார். அப்போது புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறினார். அதே வேளையில், பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தேசிய சட்டமன்ற கூட்டம் (பாராளுமன்றம்) ஏப்ரல் 11-ந்தேதி காலை 11 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக ‌ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷபாஸ் ஷெரீப்பை பிரதமராக தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சி எடுத்து வருகின்றனர். இன்று பிற்பகலில் ‌ஷபாஸ் ஷெரிப் மனுதாக்கல் செய்கிறார்.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதரர் ‌ஷபாஸ் ஷெரீப் ஆவார். அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்- மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×