என் மலர்
செய்திகள்

புதின்
இன்று பெலாரஸ் என்றால் அடுத்து ரஷியா தான் - எச்சரிக்கும் அலெக்சாண்டர் - என்ன செய்யப்போகிறார் புதின்
நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாக பெலாரஸ் இன்று தோல்வியடைந்தால் அடுத்தது ரஷியா தான் அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
மினிஸ்க்:
பெலாரஸ் நாட்டின் அதிபராக அலெக்சாண்டர் லூகாஷென்கோ கடந்த 26 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலிலும் அலெக்சாண்டரே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், அதிபர் அலெக்சாண்டர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்று வரும் போராட்டம் 1 மாதமாக நீடித்து வருகிறது. இந்த போராட்டங்களுக்கு பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா அண்டை நாடான லிதுவேனியாவில் இருந்தபடி ஆதரவு அளித்து வருகிறார். அதேபோல் மற்றொரு போராட்ட ஒருங்கிணைப்பாளரான வெரோனிகா டிசிப்கலோ போலாந்து நாட்டிற்கு தப்பிசென்றுவுள்ளார்.
ஆனால், மரியா கொலிஸ்னிகோவா என்ற ஒருங்கிணைப்பாளர் மட்டும் இன்னும் பெலாரஸ் நாட்டிலேயே இருக்கிறார். அவரை பெலாரஸ் படையினர்
கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில், ஐரோப்பாவையும், ரஷியாவையும் பிரிக்கும் எல்லை நாடாக உள்ளதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக பெலாரஸ் மாறியுள்ளது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்கோவுக்கு ரஷியா ஆதரவளித்து வருகிறது.

அதேசமயம் எதிர்க்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் பெலாரஸ் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க நேட்டோ படையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால், பெலாரஸ் அதிபர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உதவியை நாடினார்.
இதையடுத்து, தேவைப்படும் நேரத்தில் பெலாரஸ் அரசுக்கு ராணுவ ரீதியிலான உதவிகள் வழங்க தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
இந்த அதிரடி அறிவிப்பால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷிய படைகளுக்கும் மோதும் களமாக பெலாரஸ் மாறலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
1999-ம் ஆண்டு முதல் தற்போதுவரை சுமார் 21 ஆண்டுகளாக ரஷியாவின் அதிபர் அல்லது பிரதமர் என்ற இரு பதவிகளில் மாறிமாறி தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ள ரஷியாவின் விளாடிமிர் புதினுக்கு பெலாரஸ் விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
தன்னைப்போன்றே 20 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சிப்பொறுப்பில் உள்ள ஒரு அதிபருக்கு எதிராக உள்நாட்டில் மக்கள் போராட்டம் அதிகரிப்பது ரஷிய மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி தனது அரசியல் மற்றும் அதிபர் பதவிக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் புதின் மிகவும் கவனமாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், ரஷிய அரசின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லூகான்ஷென்கோ நேற்று பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
நான் பெலாரஸ் அதிபராக சற்று அதிககாலம் பதவியில் இருந்திருக்கலாம். ஆனால் என்னால் மட்டுமே பெலாரசை பாதுகாக்கமுடியும். நான் பெலாரசை 25 ஆண்டுகளுக்கு மேலாக கட்டமைத்துள்ளேன்.
நான் சாதாரணமாக விலகமாட்டேன். எனது பதவியையும் விட்டுத்தரமாட்டேன். நான் பதவியைவிட்டு வெளியேறினேன் என்றால் எனது ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுவிடுவார்கள்.
ஒருவேளை பெலாரஸ் அரசு இன்று தோல்வியடைந்தால் அடுத்து ரஷியா தான். ரஷியா மிகவும் வளமிக்கது. இதுபோன்ற போராட்டங்கள் நிறைந்த சூழ்நிலையை சமாளித்துவிடும் என நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது தவறு.
என்றார்.
Next Story