என் மலர்
செய்திகள்

வரைபட திருத்த மசோதாவுக்கு நேபாள ஜனாதிபதி ஒப்புதல்
இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபட திருத்த மசோதாவுக்கு நேபாளத்தின் ஜனாதிபதி ஒப்புதல்
இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபட திருத்த மசோதா நேபாளத்தின் மேல்சபையில் இன்று நிறைவேறிய நிலையில், ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லிபுலேக், காலாபனி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் உரசல் போக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதற்கு காரணம் இந்தியாவின் ஆட்சேபத்தை பொருட்படுத்தாமல் லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை நேபாள அரசு தயாரித்துள்ளதுதான்.
இந்த வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் நேபாள அரசியல் சாசன திருத்த மசோதா கடந்த சனிக்கிழமை அந்த நாட்டு நாடாளுமன்ற கீழ்சபையில் ஒருமனதாக நிறைவேறியது. நேபாள அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா இந்த சேர்க்கை விரிவாக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனக் கூறுகிறது. இந்த பிரச்சினை காரணமாக இந்தியா மற்றும் நேபாளத்தின் உறவு மிகவும் மோசமடைந்துள்ளது.
தற்போது இந்த நேபாள வரைபட அரசியல் திருத்த மசோதா இன்று மேல்சபையிலும் நிறைவேறி உள்ளது. மேல் சபையின் 57 உறுப்பினர்களும் மசோதாவுக்கு ஆதரவாக ஒருமனதாக வாக்களித்தனர்.
இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதால், புதிய நேபாள வரைபடத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஒப்புதலை அளித்துள்ளார். இதனால் திருத்த மசோதா ஒரு சட்டமாக மாறுகிறது.
Next Story






