search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போயிங் மேக்ஸ்-8 விமானங்களை வாங்கும் ஆர்டரை ரத்து செய்தது இந்தோனேசிய விமான நிறுவனம்
    X

    போயிங் மேக்ஸ்-8 விமானங்களை வாங்கும் ஆர்டரை ரத்து செய்தது இந்தோனேசிய விமான நிறுவனம்

    போயிங் மேக்ஸ் விமானங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி பெரும் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், 49 போயிங் மேக்ஸ் 8 ரக விமானங்களை வாங்குவதற்கு வழங்கிய ஆர்டரை இந்தோனேசிய விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது. #Boeing737Max8 #IndonesianAirline #AirlineGarudaIndonesia
    ஜகார்த்தா:

    அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் எத்தியோப்பியாவில் கடந்த 10ம் தேதி விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். இதனால் மேக்ஸ் ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுந்துள்ளது.

    பல்வேறு நாடுகள் போயிங் மேக்ஸ் ரக விமானங்களை தரையிறக்கி ஆய்வு செய்து வருகின்றன. புதிதாக அந்த ரக விமானங்களை வாங்குவதற்கும் தயக்கம் காட்டி வருகின்றன.



    இந்நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை வாங்குவதற்கு வழங்கப்பட்ட ஆர்டரை இந்தோனேசியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான கருடா ரத்து செய்துள்ளது.

    மொத்தம் 50 விமானங்களை 4.9 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க கருடா நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. அதில் ஒரு விமானம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 49 விமானங்களை வாங்குவதற்கு வழங்கிய ஆர்டரை ரத்து செய்யும்படி, போயிங் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி உள்ளது.

    வாடிக்கையாளர்களின் கவலைகள் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், ஆர்டரை ரத்து செய்ய வேண்டும் என்றும் போயிங் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

    இரண்டு விபத்துகளில் 346 உயிர்கள் பலியான பிறகு, போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானத்தின் ஆர்டர் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #Boeing737Max8 #IndonesianAirline #AirlineGarudaIndonesia

    Next Story
    ×