search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் மாயமான 9 இந்தியர்கள் கதி என்ன? நியூசிலாந்து இந்திய தூதரகம் விளக்கம்
    X

    பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் மாயமான 9 இந்தியர்கள் கதி என்ன? நியூசிலாந்து இந்திய தூதரகம் விளக்கம்

    நியூசிலாந்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாயமான 9 இந்தியர்கள் கதி என்ன என்பது குறித்து அங்குள்ள இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. #MosqueShooting #NewZealandShooting #IndiansMissing
    கிறைஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து நாட்டில் கிறைஸ்ட்சர்ச் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அல் நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பாவி மக்கள் 49 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதல்களின்போது பலர் காணாமல் போயும் உள்ளனர்.

    பலியானவர்களில் இந்தியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜோர்டான் என பல நாடுகளில் இருந்து சென்று நியூசிலாந்தில் குடியேறியவர்களும் அடங்குவார்கள். இதேபோன்று பல்வேறு நாட்டினர் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுகின்றனர். அவர்கள் எல்லோரையும் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.



    அந்த வகையில், பலியானவர்களில், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து குடியேறிய 71 வயது தாவூத் நபி முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    இதேபோன்று எகிப்து, பாகிஸ்தானை சேர்ந்த தலா 4 பேர், வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேர் பலியானது உறுதியாகி உள்ளது.

    நியூசிலாந்து நாட்டில் சுமார் 2 லட்சம் இந்தியர்கள் வசித்து வந்த நிலையில், இந்த தாக்குதல்களின்போது 7 இந்தியர்களும், 2 இந்திய வம்சாவளியினரும் காணாமல் போய் உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வந்தன.

    9 பேர் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக, தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருவதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்களின் குடும்பத்தினருடனும் தொடர்ந்து பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “பல்வேறு தரப்பில் இருந்தும் பெறப்பட்ட தகவல்கள்படி, இந்தியர்கள் 9 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள். அதிகாரப்பூர்வமாக இனிதான் இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட இந்தியர்கள் உதவிக்காக தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என கூறி தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    இதே போன்ற தகவல்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமாரும் வெளியிட்டுள்ளார்.

    காணாமல்போன இந்திய வம்சாவளிகளில் ஒருவர், பர்ஹஜ் அசன் ஆவார். இவர் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். கடந்த 7 வருடங்களாக அங்கு வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

    அசனின் பெற்றோர், தங்கள் மகனை காணாமல் பரிதவித்து வருகின்றனர். இதுபற்றி அசனின் தாயார் பாத்திமா கூறும்போது, “இதுவரை எங்கள் மகனைப்பற்றி தகவல் இல்லை. நாங்கள் மிகுந்த கவலையில் இருக்கிறோம்” என்றார்.

    இவர்கள் ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.

    காணாமல் போன இந்தியர்களில் 3 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் 2 பேர் வதோதராவை சேர்ந்த தந்தையும், மகனும் ஆவர். மற்றொருவர் நவ்சாரி பகுதியை சேர்ந்தவர்.

    படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகிறவர்களில் பாரூச் பகுதியை சேர்ந்த ஒருவரும், மத குரு ஒருவரும், ஆமதாபாத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், ஐதராபாத்தை சேர்ந்த அகமது இக்பால் ஜகாங்கீர் என்பவரும் காயம் அடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை அவரை காண்பதற்காக நேரில் செல்கிற சகோதரர் குர்ஷித் ஜகாங்கீர் தெரிவித்தார். #MosqueShooting #NewZealandShooting #IndiansMissing

    Next Story
    ×