என் மலர்
செய்திகள்

விமான விபத்து எதிரொலி - போயிங் 737 விமானங்களுக்கு கனடா தடை
எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து, பல்வேறு நாடுகள் போயிங் விமானங்களுக்கு தடை விதித்து வரும் நிலையில், கனடாவும் தங்களது வான்எல்லையில் போயிங் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. #Boeing737MAX8
ஓட்டாவா:
எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து, நார்வே, வியட்நாம், பிரிட்டன், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட மேலும் பல நாடுகளும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு தடைவிதித்தன.

இந்த நிலையில், கனடாவும் போயிங் விமானங்களை இயக்க தடை விதித்துள்ளது. இதுகுறித்து கனடாவின் போக்குவரத்துத்துறை மந்திரி மார்க் கர்னோவ் கூறும்போது, பாதுகாப்பு கருதி வணிக ரீதியிலான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ மற்றும் ‘போயிங் 737 மேக்ஸ் 9’ விமானங்கள் கனடாவில் இருந்து புறப்படவோ, கனடாவுக்கு வரவோ அல்லது கனடா வான் எல்லையில் பறக்கவோ தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க மத்திய விமான போக்குவரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #CanadaBansBoeing737MAX8
Next Story