search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்
    X

    ராணுவத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல்

    பெங்களூருவில் நேற்று 12-வது சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்த மத்திய ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். #NirmalaSitharaman
    பெங்களூரு:

    12-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி தொடக்க விழா நேற்று பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் நடந்தது. இதில் ராணுவத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் 600 இந்திய நிறுவனங்கள், 200 வெளிநாட்டு நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த கண்காட்சியில் போர் விமானங்கள் மட்டுமின்றி ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், பயணிகள் விமான நிறுவனம் ஆகியவையும் கலந்து கொண்டுள்ளன. இதன்மூலம் உலக அளவில் இந்தியா தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.



    இந்த கண்காட்சி 100 கோடி வேலைவாய்ப்புகளின் ஓடுதளமாக உள்ளது. இந்தியாவில் ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ‘மேக் இன் இந்தியா’, அதாவது இந்தியாவில் தயாரிப்போம் என்பதுதான் இந்த கண்காட்சியின் நோக்கம். உற்பத்தி துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகிறது.

    ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தில் உற்பத்தி துறையின் மூலம் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

    கடந்த 2014 முதல் 2018-ம் ஆண்டு வரை ராணுவத்திற்கென 150 தொழில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் பொருட்களை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் 126 உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 950 கோடி ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளோம்.

    இந்தியாவில் சந்தை வாய்ப்பு நன்றாக உள்ளது. ராணுவத்துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு விதிகளை தளர்த்தி உள்ளோம். இதன்மூலம் ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்.

    பெங்களூரு-ஓசூர்-சென்னை இடையே ராணுவ தொழில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் உத்தரபிரதேசத்தில் ஒரு விமான வழித்தடம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவையில் விமான தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.

    விழாவில் முதல்-மந்திரி குமாரசாமி, விமானத்துறை மந்திரி சுரேஷ் பிரபு, முப்படை தளபதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்ததும் விமான சாகசங்கள் தொடங்கின. முதலில் தனுஷ், சாரங், சாரஸ் ஹெலிகாப்டர்கள், சுகோய், தேஜஸ் மற்றும் போர் விமானங்கள் அணிவகுப்பு நடத்தின. அதைத் தொடர்ந்து இந்திய ராணுவப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் வானில் சாகச நிகழ்ச்சிகளை நடத்தின. இதில் குறிப்பாக சாரங் ஹெலிகாப்டர்கள் ஒன்றோடொன்று மோதுவதுபோல் வந்த காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன.

    இதுமட்டுமின்றி அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான எப்-16 என்ற வகையைச் சேர்ந்த போர் விமானமும் சாகசத்தில் ஈடுபட்டது. எல்.யூ.எச்., எல்.சி.எச். ஹெலிகாப்டர்கள் சாகசத்தில் ஈடுபட்டன. ரபேல் போர் விமானங்கள் வானத்தில் தாறுமாறாக சுழன்று சாகசம் நிகழ்த்தின.

    இந்த கண்காட்சியில் ரஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, இஸ்ரேல், உக்ரைன் உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 விமான உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்று அரங்குகளை அமைத்துள்ளன.

    வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
    Next Story
    ×