search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இலங்கை சிறையில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் விடுதலை? - ராஜபக்சே அதிரடி திட்டம்

    தமிழின மக்களின் நீண்டகால கோரிக்கையான இலங்கை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதன் மூலம் தமிழ் எம்.பி.க்கள் ஆதரவைபெற ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். #Tamilprisoners #SrilankaTamilprisoners #Rajapaksa
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என  விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், பிரதமர் மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக அவசரமாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு விக்கிரமசிங்கே கடிதம் அனுப்பினார்.

    பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்பட்டால் அங்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர விக்கிரமசிங்கே திட்டமிட்டிருந்த நிலையில், நவம்பர் 16-ம் தேதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்தார்.

    இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ளனர். பிரதமர் பதவியில் நீடிப்பதற்கான மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். ராஜபக்சே - ரணில் விக்ரமசிங்கே இருவருமே தங்களுக்கு போதுமான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார்கள்.

    ராஜபக்சே-சிறிசேனா அணியினருக்கு 96 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு மெஜாரிட்டியை பெற மேலும் 18 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ரணில் விக்ரமசிங்கேவுக்கு 115 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் 5 பேரை ராஜபக்சே வளைத்து விட்டதாகவும் இதன் மூலம் அவருக்கு 101 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது.

    இதற்கிடையில், வரும் 7-ம் தேதி பாராளுமன்றத்தை கூட்ட அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா ஒப்புதல் அளித்துள்ளார். அப்போது ராஜபக்சே அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் தீர்மானத்தை ஆதரித்தும், ராஜபக்சேவுக்கு எதிராகவும் வாக்களிக்கப் போவதாக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 21 எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தமிழ் எம்.பி.க்களின் மனப்போக்கை மாற்றி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக ராஜபக்சே காய்நகர்த்தி வருகிறார்.

    இதில் ஒருகட்டமாக தமிழின மக்களின் நீண்டகால கோரிக்கையான இலங்கை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதன் மூலம் தமிழ் எம்.பி.க்கள் ஆதரவைபெற ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.


    இந்த தகவலை ராஜபக்சேவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையில் பெறுமதியான கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது. நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் பிரதமர் ராஜபக்சே ஆகியோர் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர் என  நாமல் ராஜபக்சே பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2009-ம் ஆண்டில் இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான உச்சகட்ட போர் முடிவடைந்த பின்னர் சரணடைந்த பல்லாயிரம் தமிழர்களையும், பின்னர் அரசின் தேடுதல் வேட்டையில் பிடிபட்ட பலரையும் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் ராஜபக்சே அரசு முன்னர் அடைத்து வைத்தது.

    எவ்வித விசாரணையுமின்றி இப்படி பல ஆண்டுகாலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை முந்தைய ராஜபக்சே அரசும், பின்னர் வந்த மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான அரசும் நிராகரித்து வந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.  #Tamilprisoners #SrilankaTamilprisoners #Rajapaksa
    Next Story
    ×