என் மலர்
செய்திகள்

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஹபீஸ் சயீத், சையத் சலாஹுதீனுக்கு எதிராக என்.ஐ.ஏ. கைது வாரன்ட்
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலுக்கு நிதி திரட்டி தந்ததாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஹபீஸ் சயீத், சையத் சலாஹுதீன் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை கோர்ட் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. #Nonbailablewarrants #HafizSaeed #SyedSalahuddin
புதுடெல்லி:
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதி அளிக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது என்.ஐ.ஏ. எனப்பட்டும் தேசிய புலனாய்வு முகமை கடந்த 30-5-2017 அன்று வழக்குப்பதிவு செய்தது.
இதைதொடர்ந்து, காஷ்மீர், அரியானா, டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள 60 இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஆயிரம் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சுமார் 300 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.
இதன்மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்திய குற்றவியல் சட்டம் 121-ன்கீழ் 12,794 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியாவில் உள்ள பிரிவினைவாத சக்திகளுக்கு நிதி திரட்டித்தந்து இங்கு பயங்கரவாத தாக்குதல்களை ஊக்குவித்ததாக பாகிஸ்தானில் இருக்கும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதீன் உள்பட 12 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர்களை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்குமாறு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வலியுறுத்தியதற்கு இணங்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஹபீஸ் சயீத், சையத் சலாஹுதீன் ஆகியோருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் விடுவிக்க முடியாத கைது உத்தரவு பிறப்பித்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் செய்தி தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார். #Nonbailablewarrants #HafizSaeed #SyedSalahuddin
Next Story






