என் மலர்
செய்திகள்

இந்தியாவுக்கு வருகை தந்த முதல் போப் ஆண்டவர் 6-ம் பாலுக்கு நாளை புனிதர் பட்டம்
வாடிகன்:
கத்தோலிக்க திருச்சபையின் 262-வது போப் ஆண்டவராக பதவி வகித்தவர் 6-ம் பால். ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என அனைத்து கண்டங்களுக்கும் பயணம் செய்த முதல் போப் ஆண்டவர் 6-ம் பால். 1964-ல் பம்பாயில் நடைபெற்ற நற்கருணை மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார். இவரை, அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி ஜாகிர் உசேன், பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் வரவேற்றனர்.
கத்தோலிக்க திருச்சபையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த 2-ம் வத்திக்கான் சங்கத்தின் தீர்மானங்களுக்கு காரணமாக இருந்தவர் போப் 6-ம் பால். கத்தோலிக்க திருச்சபையில் தாய்மொழி வழிபாட்டையும், விழா கொண்டாட்டங்களில் புதிய நடைமுறையையும் இவர் அறிமுகம் செய்தார். கருக்கலைப்பு உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக 1968-ல் 6-ம் பால் வெளியிட்ட சுற்றுமடல் உலக நாடுகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.
1970-ம் ஆண்டு பிலிப் பைன்ஸ் நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், இவரைக் கொலை செய்ய முயற்சிகள் நடந்தன. அதன் பிறகு, பல ஆண்டுகள் கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தப் பாதையில் வழிநடத்திய போப் 6-ம் பால், 1978 ஆகஸ்ட்டு 6-ந் தேதி மரணம் அடைந்தார்.
2012-ல் போப் 16-ம் பெனடிக்ட்டால் வணக்கத்திற்கு உரியவராக அறிவிக்கப்பட்ட இவரை, 2014-ல் போப் பிரான்சிஸ் அருளாளராக உயர்த்தினார்.
2014-ம் ஆண்டு இத்தாலியின் வெரோனா பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணியின் 5 மாத கரு, போப் 6-ம் பாலிடம் வேண்டியதால் உயிர் பிழைத்தது மருத்துவ அற்புதமாக கருதப்படுகிறது.
இந்த அற்புதத்தை அங்கீகரித்துள்ள போப் பிரான்சிஸ், வாடிகனில் நாளை நடைபெறும் விழாவில் போப் 6-ம் பாலுக்கு புனிதர் பட்டம் வழங்குகிறார். எல் சால்வதார் நாட்டில் மனித உரிமைக்காக குரல் கொடுத்ததால் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட போராயர் ஆஸ்கர் ரொமேரோ உள்பட மேலும் 6 பேருக்கும் நாளை புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. #pope






