search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் ஐகோர்ட்டு நீதிபதி நீக்கம்
    X

    பாகிஸ்தானில் ஐகோர்ட்டு நீதிபதி நீக்கம்

    பாகிஸ்தானில் நீதிமன்ற நடவடிக்கையில் உளவுத்துறை தலையிடுகிறது என புகார் கூறிய இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நீதிபதி சித்திக் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #ShaukatSiddiqui
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ராணுவத்துக்கு அடுத்த நிலையில் அதிகாரம் செலுத்துகிற அமைப்பாக ஐ.எஸ்.ஐ. என்னும் உளவுத்துறை செயல்படுகிறது. பயங்கரவாதத்தை வளர்த்து விடுவதில் இந்த ஐ.எஸ்.ஐ.க்கு முக்கிய பங்கு உண்டு என்ற குற்றச்சாட்டு காலகாலமாக இருந்து வருகிறது.

    அது மட்டுமல்லாது, எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதுடன், அரசியல் நடவடிக்கைகளிலும் ஐ.எஸ்.ஐ.யின் தலையீடு உள்ளது என்ற புகார் இருக்கிறது.

    இந்தியாவில் நடைபெற்ற பல பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ. இருந்தது என்ற குற்றச்சாட்டும் உண்டு.

    இந்த நிலையில் பாகிஸ்தான் நீதித்துறை நடவடிக்கைகளிலும் ஐ.எஸ்.ஐ.யின் தலையீடு இருக்கிறது என்று கூறப்படுகிறது.அங்கு ராவல்பிண்டியில் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி நடந்த மாவட்ட வக்கீல்கள் சங்க கூட்டத்தில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி சவுக்கத் அஜீஸ் சித்திக் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர், “நீதிமன்ற நடவடிக்கைகளில் ஐ.எஸ்.ஐ. தலையிடுகிறது. தனது அதிகாரிகளைக் கொண்டு, வழக்குகளை விசாரிப்பதில் அமர்வுகளை அமைப்பது, வழக்குகளை குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு ஒதுக்குவது வரையில் ஐ.எஸ்.ஐ. தலையிடுகிறது” என குற்றம் சாட்டினார்.

    அது மட்டுமல்ல, “இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை ஐ.எஸ்.ஐ. நாடியது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நவாஸ் ஷெரீப்பையும், அவரது மகளையும் சிறையில் இருந்து வெளியே விடுவதை விரும்பவில்லை என கூறியது” என்றும் குற்றம் சாட்டினார்.

    இது நீதிமன்ற நடவடிக்கையில் ஐ.எஸ்.ஐ.யின் தலையீட்டை அம்பலப்படுத்தியதுடன், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    இது குறித்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டிடம் புகார் செய்யப்பட்டது.

    தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையில் 5 நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் நீதித்துறை கவுன்சில் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    அதன்முடிவில், ஐ.எஸ்.ஐ. மீது குற்றச்சாட்டுகள் கூறிய இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சித்திக்கை பதவி நீக்கம் செய்ய முடிவு எடுத்து ஜனாதிபதி டாக்டர் ஆரிப் ஆல்விக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

    அந்தப் பரிந்துரையில், “ராவல்பிண்டி மாவட்ட வக்கீல்கள் சங்கத்தில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நீதிபதி சவுக்கத் அஜீஸ் சித்திக் பேசிய பேச்சு, அவர் நடத்தை தவறான குற்றவாளி என்பதை காட்டுகிறது. எனவே அவர் பாகிஸ்தான் அரசியல் சாசனத்தின் பிரிவு 209 (6)-ன் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஒருமனதாக முடிவு செய்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

    இதன் பேரில் நீதிபதி சவுக்கத் அஜீஸ் சித்திக்கை ஜனாதிபதி டாக்டர் ஆரிப் ஆல்வி பதவி நீக்கம் செய்துள்ளார்.

    இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை அந்த நாட்டின் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

    இந்த நடவடிக்கை குறித்து நீதிபதி சித்திக் கருத்து தெரிவிக்கையில், “சுப்ரீம் நீதித்துறை கவுன்சிலின் இந்த முடிவு, நான் எதிர்பாராத ஒன்று அல்ல. அடிப்படை ஆதாரம் இல்லாமல் என் மீது விசாரணை நடத்தி பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன். நான் திறந்த நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அதற்கு மாறாக ரகசிய விசாரணை நடந்துள்ளது. நான் மக்கள் முன்னிலையில் என் நிலைப்பாட்டை கூறுவேன். 50 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு ஐகோர்ட்டு நீதிபதியை எதற்காக பதவி நீக்கம் செய்துள்ளனர் என்ற உண்மையை மக்களிடம் விளக்குவேன்” என்று தெரிவித்தார். #ShaukatSiddiqui
    Next Story
    ×