search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவை சேர்ந்த இருவர் சிறப்புக்குரிய ரமோன் மகசேசே விருதுகளை பெற்றனர்
    X

    இந்தியாவை சேர்ந்த இருவர் சிறப்புக்குரிய ரமோன் மகசேசே விருதுகளை பெற்றனர்

    இந்தியாவை சேர்ந்த மனநல மருத்துவர் பரத் வட்வானி மற்றும் கற்பித்தலில் சேவை புரிந்த சோனம் வாங்சுக் ஆகியோர் இன்று சிறப்புக்குரிய ரமோன் மகசேசே விருதுகளை பெற்றனர். #MagsaysayAward
    மணிலா:

    பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மகசேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை போன்றவற்றை வளரும் நாடுகளில் பரப்பும் வகையிலும் கடந்த 1957-ம் ஆண்டுமுதல் ரமோன் மகசேசே விருது வழங்கப்பட்டு வருகிறது.  

    ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் விருது விமான விபத்தில் மறைந்த முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோமன் மகசேசே நினைவாக ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 

    அவ்வகையில், இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இரு இந்தியர்களான மும்பையை சேர்ந்த பரத் வட்வானி மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியை சேர்ந்த சோனம் வாங்சுக் உள்பட 6 பேர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று நடைபெற்ற விழாவில் இந்த விருதை பெற்றனர்.

    இவர்களில் மும்பையை சேர்ந்த பரத் வட்வானி மற்றும் அவரது மனைவி ஆகியோர், மனநலம் குன்றி மும்பை வீதிகளில் திரியும் நோயாளிகளை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான இலவச உறவிடம், உணவு மற்றும் சிகிச்சை அளித்து பின்னர் குணமடைந்த பிறகு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் அரிய சேவையை செய்து வந்துள்ளனர். இதற்காக 1988-ம் ஆண்டில் சாரதா மறுவாழ்வு மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பரத் வட்வானி ஆற்றிய தொண்டுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 

    சோனம் வாங்சுக்- பரத் வட்வானி 
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியை சேர்ந்த சோனம் வாங்சுக், தனது 19-வது வயதில் பொறியியல் கல்வி பயின்றுவந்தபோது கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் இருந்த நிலையில், படிப்பில் பின்தங்கிய நிலையில் அரசு தேர்வுகளில் வெற்றி பெறாமல் இருந்த மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி அவர்களின் வெற்றிக்கு பக்கபலமாக விளங்கினார்.

    பின்னர் 1988-ம் ஆண்டில் லடாக் மாணவர் கல்வி கலாச்சார கழகம் என்னும் அமைப்பை தொடங்கி பல்லாயிரம் மாணவர்களின் வாழ்க்கைத்தரம் உயர இவர் உழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய விழாவின்போது இவர்களை தவிர பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹோவார்ட் டி, கம்போடியாவை சேர்ந்த யோவ்க் சாங், கிழக்கு டைமூர் நாட்டை சேர்ந்த மரியா டி லூர்ட்ஸ் மார்ட்டின்ஸ், வியட்நாம் நாட்டை சேர்ந்த வோ தி ஹோவாங் என் ஆகியோருக்கும்  இந்த ஆண்டுக்கான இவ்விருது வழங்கப்பட்டது. #MagsaysayAward
    Next Story
    ×