search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் போலி செய்திகளால் அதிகரிக்கும் ஆபத்துக்கள்
    X

    இந்தியாவில் போலி செய்திகளால் அதிகரிக்கும் ஆபத்துக்கள்

    இந்தியாவில் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்திகளால் பல உயிர்கள் பலியாகி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. #Fakenews #India #BBC
    லண்டன்:

    ஊடகங்களை காட்டிலும், சமூக ஊடகங்களில் மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள் உடனுக்குடன் பகிரப்பட்டு வருகின்றன. எனினும், சமீப காலமாக போலி செய்திகள் பரவுவது அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் பரவும் போலி செய்திகளால் பல்வேறு பிரச்சனைகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதன் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்துவந்தாலும், ஒரு சில அரசியல் கட்சிகள் தங்களின் சுய லாபங்களுக்காகவும், மக்களை ஏமாற்றுவதற்காகவும் போலி செய்திகளை வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றன.

    இதுதொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்தியாவில் பரவும் போலியான செய்திகளால் பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்வதாக குறிப்பிட்டுள்ளது.

    இதுதொடர்பாக பிபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் சமீபத்தில் பரவும் குழந்தை கடத்தல் கும்பல் எனும் போலி செய்தியால் இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், பலர் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், செய்தி வாசிப்பாளர்களில் 83 சதவிகிதம் பேர் போலி செய்திகள் குறித்து அச்சமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுபோன்ற போலி செய்திகளை தவிர்ப்பதற்காக இந்தியாவில் காஷ்மீர் போன்ற இடங்களில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின் போது, போலி செய்திகள் பரப்பி மக்களை அச்சுறுத்துவதை தவிர்ப்பதற்காக இண்டர்நெட் சேவை தற்காலிகமாக முடக்கப்படுகிறது.

    இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வந்தாலும், மக்களும் சமூக வலைதளங்கள் மூலம் பெறும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியமாகிறது. #Fakenews #India #BBC
    Next Story
    ×