search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாந்தா நிறுவனத்தை பங்குச்சந்தையில் இருந்து நீக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி கோரிக்கை
    X

    வேதாந்தா நிறுவனத்தை பங்குச்சந்தையில் இருந்து நீக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி கோரிக்கை

    ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என்று பிரிட்டன் எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. #Vedanta #LabourParty
    லண்டன்:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில், லண்டன் பங்குச் சந்தையில், வேதாந்தா பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. சூழலியலுக்கு எதிரான தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று, இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதையடுத்து லண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழும பங்குகளை விலக்க வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.



    ‘போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதையடுத்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த  நிறுவனம் சுற்றுச்சூழலை சீரழித்து பொதுமக்கள் கட்டாயமாக வெளியேறும் வகையில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலை செய்து வருகிறது. பிரச்சார இயக்கங்கள் சர்வதேச பொது மன்னிப்பு சபை போன்ற அரசு சாரா அமைப்புகளும் வேதாந்தா நிறுவனம் மீது குற்றம்சாட்டியுள்ளன’ என தொழிலாளர் கட்சி தலைவர் ஜான் மெக்டோனல் கூறியுள்ளார்.

    மும்பை பங்கு சந்தையில் ஏற்கனவே வேதாந்தா அளித்த அறிக்கையில், தூத்துக்குடியில் தங்கள் நிறுவனத்தின் முதல் அலகு மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து லண்டன் பங்கு சந்தையிலும் வேதாந்தா குழுமத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால் லண்டன் பங்குச் சந்தை இந்த பிரச்சினையில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. #Vedanta #LabourParty
    Next Story
    ×