search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்ரிக்க நாட்டவர்களுக்கு விசா சலுகை: கென்யா அதிபராக பதவியேற்ற கென்யட்டா அறிவிப்பு
    X

    ஆப்ரிக்க நாட்டவர்களுக்கு விசா சலுகை: கென்யா அதிபராக பதவியேற்ற கென்யட்டா அறிவிப்பு

    கென்யா அதிபராக இரண்டாவது முறையாக இன்று பதவியேற்ற ஊகுரு கென்யட்டா, அந்நாட்டுக்கு வரும் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா எடுப்பதில் சலுகைகளை அறிவித்துள்ளார்.
    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் ஊகுரு கென்யட்டாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி அதிபர் தேர்தல் நடந்தது. தேர்தலில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் ரைலா ஓடிங்கா போட்டியிட்டார். ஆனால், இந்த தேர்தலில் மறுபடியும் ஊகுரு கென்யட்டா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால், தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதனால் தேர்தலை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதன்பின்னர் அக்டோபர் 26-ம் தேதி மறுதேர்தல் நடந்தது. தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாலும், வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படாத நிலையில் தேர்தலை நடத்தியதாலும், எதிர்க்கட்சி இந்த தேர்தலை புறக்கணித்தது. இதனால் வெறும் 39 சதவீத வாக்குகளே பதிவானது. இதில் 98 சதவீத வாக்குகளைப் பெற்று கென்யட்டா வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. அதிபர் தேர்தலில் உகுரு கென்யட்டா வெற்றி பெற்றது செல்லும் என்றும் தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், இரண்டாவது முறையாக ஊகுரு கென்யட்டா அதிபராக இன்று பதவியேற்றுக்கொண்டார். தலைநகர் நைரோபியில் கோலாகலமாக நடந்த பதவியேற்பு விழாவில் கென்யாவுக்கு வருகை தரும் ஆப்ரிக்க நாட்டவர்கள் கென்யாவுக்குள் வந்த பின்னர் விசா எடுத்துக்கொள்ளலாம் என ஊகுரு கென்யட்டா அறிவித்தார்.

    கென்யட்டா பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானார்கள்.

    ஊகுரு கென்யட்டா பதவியேற்றதை ஜீரணித்துக்கொள்ள முடியாத ரைலா ஓடிங்கா, கென்யட்டா வெற்றி பெற்றது எந்த வகையிலும் செல்லாது, கென்யாவின் அதிபராக அடுத்த மாதம் நான் பதவிப்பிரமாணம் எடுப்பேன் என்று அறிவித்துள்ளார்.
    Next Story
    ×