search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியான்மர் கலவரம் மேலும் பரவும் - அகதிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்: ஐ.நா.சபை கவலை
    X

    மியான்மர் கலவரம் மேலும் பரவும் - அகதிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்: ஐ.நா.சபை கவலை

    மியான்மர் நாட்டின் ரக்கினே மாநிலத்தில் கலவரம் மேலும் பரவும். அதன் எதிரொலியாக வெளிநாடுகளுக்கு செல்லும் அகதிகள் கூட்டமும் கனிசமாக அதிகரிக்கும் என ஐ.நா.சபை பொதுச்செயலாளர் அச்சம் தெரிவித்துள்ளார்.
    நியூயார்க்:

    மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

    மியான்மர் அரசியல் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தவரோ, அவரின் குழந்தைகளோ நாட்டின் உயரிய பதவியை வகிக்கமுடியாது. இதன் அடிப்படையில், ஜனநாயகத்துக்கான தேசிய கட்சியின் தலைவரான ஆங் சான் சூகி, இங்கிலாந்து நாட்டுக்காரரை திருமணம் செய்ததால் அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே, அவர் தனது ஆதரவாளர்களும் நம்பிக்கைக்குரியவருமான ஹிதின் கியாவ் என்பவரை சூகி களம் இறக்கினார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆங் சான் சூகியின் ஆதரவு பெற்ற ஹிதின் கியாவ்(67) மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆங் சான் சூகி அரசு ஆலோசகராக இருந்து வருகிறார்.

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமாகி உள்ளது.

    மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள்
    அங்கிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

    முன்னதாக, மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் நடத்திவரும் ஒடுக்குமுறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்தார். ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

    மியான்மர் நாட்டின் ரக்கினே மாநிலத்தில் பாதுகாப்பு, மனிதநேயம், மனித உரிமைகள் சீரழிந்து வருவதாக குறிப்பிட்ட அன்டோனியோ, வறுமையின் பிடியில் சிக்கியுள்ள ரக்கினே மாநிலத்தில் வாழ்பவர்கள் நீண்டகாலமாகவே அநீதியான முறையில் நடத்தப்படுவதை அறிந்து வேதனை அடைவதாக இருவாரங்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

    இந்நிலையில், மியான்மர் நாட்டின் ரக்கினே மாநிலத்தில் கலவரம் மேலும் பரவும். மாநிலத்தின் மத்திய பகுதிவரை கலவரம் பரவக்கூடும். அதன் எதிரொலியாக வெளிநாடுகளுக்கு செல்லும் அகதிகள் கூட்டமும் கனிசமாக அதிகரிக்கும் என ஐ.நா.சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தற்போது அச்சம் தெரிவித்துள்ளார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட்டத்தில் ரோஹிங்கியா மக்கள் பிரச்சனை தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, இதுதொடர்பாக கவலை தெரிவித்த அன்டோனியோ குட்டெரெஸ், மியான்மரில் நடைபெறும் கலவரம் உலகில் அதிவேகமாக வளர்ந்துவரும் அகதிகள் பிரச்சனையாகவும், மனிதநேயம் சார்ந்த அவசரநிலையாகவும் மாறி வருவதாக குறிப்பிட்டார்.

    குழந்தைகள், பெண்கள், முதியோர் என மியான்மரில் இருந்து தொடர்ந்து வெளியேறும் மக்கள் கூட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதுகுத்தண்டை உறையவைக்கும் விதத்தில் உள்ளது.

    இவற்றை வைத்துப் பார்க்கையில் அங்கு நிலவிவரும் வன்முறையும், அப்பாவி மக்களுக்கு எதிரான ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லுதல், கன்னிவெடி தாக்குதல், கற்பழிப்பு உள்ளிட்ட மனிதநேயமற்ற மனித உரிமை அத்துமீறல்கள் நடைபெறுவது தெள்ளத்தெளிவாக புலனாகிறது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×