search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் ஆவேச தாக்குதல்: பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு
    X

    ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்க போர் விமானங்கள் ஆவேச தாக்குதல்: பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானப்படை 10 டன் எடைகொண்ட சக்திவாய்ந்த வெடிகுண்டை ஐ.எஸ். பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.
    ஜலால்பாத்:

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு ஆட்சி நடந்து வருகிறது. இதை அகற்றுவதற்காக ஐ.எஸ். பயங்கரவாதிகள் தலைநகர் காபூலிலும், நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    குறிப்பாக பாகிஸ்தானையொட்டி அமைந்த எல்லையோர மாகாணமான நங்கார்ஹரில் உள்ள அச்சின் மாவட்டத்தில் மோமண்ட் தாரா என்னும் இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பூமிக்கு அடியில் பல அடி ஆழத்துக்கு சுரங்கம் அமைத்து ஆயுதங்களை குவித்து வைத்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.



    இதையடுத்து பயங்கரவாதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் எம்.சி.-130 ரக சரக்கு விமானம் மூலம் 9,797 கிலோ எடைகொண்ட ஜி.பி.யூ-43 ரக வெடிகுண்டு எடுத்துச் செல்லப்பட்டு பயங்கரவாதிகள் முகாம்கள் மீது வீசப்பட்டது.

    சுமார் 30 அடி நீளமும் மூன்றரை அடி விட்டமும் கொண்ட இந்த வெடிகுண்டு விழுந்து வெடித்து சிதறிய அடுத்த வினாடியில் பயங்கரவாதிகள் முகாம் முற்றிலும் சின்னாபின்னமானது. அவர்கள் அமைத்து இருந்த சுரங்கமும் இடிந்து நொறுங்கியது.

    இதில் சம்பவ இடத்திலேயே 36 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் பயங்கரவாதிகளின் பலி எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
    Next Story
    ×