search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ட்ரம்பின் அறிவிப்பால் ‘உபேர்’ கால் டாக்சிக்கு விழுந்த அடி
    X

    ட்ரம்பின் அறிவிப்பால் ‘உபேர்’ கால் டாக்சிக்கு விழுந்த அடி

    அமெரிக்க அதிபர் டிரம்ப், 7 முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதித்ததையடுத்து, டிரம்ப்பின் வர்த்தக ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ள ‘உபேர்’ கால் டாக்சி டிரைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக உள்நாட்டுப்போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்தார். 

    மேலும், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து டிரம்ப் உத்தரவிட்டார். அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றங்கள், டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளன.

    ட்ரம்பின் வர்த்தக ஆலோசனைக் கவுன்சிலில் உபேர் கால் டாக்சி நிறுவனத்தின் தலைவர் டிராவிஸ் கலாநிக் உறுப்பினராக இருப்பதால், அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானவர்கள் உபேர் டாக்சி அப்ளிகேஷனை டெலிட் செய்துள்ளனர். உபேர் டாக்சி ஆப்பை டெலிட் செய்த படத்தை டுவிட்டரில் பதிவு செய்து  #DeleteUber என்ற ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்துள்ளனர். 
    மேலும், ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் உபேர் ஓட்டுனர்கள், ஒரு மணி நேரத்திற்கு பயணிகளை அழைத்துச்செல்ல மறுத்து, தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். 

    பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உபேர் டாக்சியில் ஓட்டுனர்களாகப் பணியாற்றுகின்றனர். தங்களது போராட்டத்தில் உபேர் நிறுவனமும் பங்கேற்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உபேர் நிறுவனத்தின் தலைவருக்கும் ட்ரம்புக்கும் இடையிலான தொடர்பை விமர்சித்து சான்பிரான்சிஸ்கோவில் உள்ள உபேர் தலைமையகம் முன்பு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.  

    இந்தநிலையில், ட்ரம்பின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுனர்களுக்கு உபேர் நிறுவனம் இழப்பீடு வழங்கும் என  டிராவிஸ் கலாநிக் தெரிவித்துள்ளார். 

    “ஓட்டுனர்களின் குடியேற்றம் தொடர்பான உதவிக்கு சட்டப் பாதுகாப்பு நிதியாக 3 மில்லியன் டாலரை உபேர் நிறுவனம் ஒதுக்கியுள்ளது. இந்தத் தடையால் பல அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டிரம்ப் உடனான முதல் வர்த்தக ஆய்வு கூட்டத்தில் இது குறித்து கேள்வி எழுப்ப உள்ளேன்'' எனவும் டிராவிஸ் கலாநிக் கூறியுள்ளார்.
    Next Story
    ×