என் மலர்
செய்திகள்

பிலிப்பைன்சில் குண்டுவீச்சு: ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் 15 பேர் பலி
பிலிப்பைன்ஸ் பகுதியில் ராணுவம் குண்டு வீச்சும், பீரங்கி தாக்குதலும் நடத்தியது. இதில் கிளர்ச்சியாளர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கிற அபு சயாப் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக அங்குள்ள லானவ் டெல் சுர் மலைப்பகுதிகளில் அந்த இயக்கத்தினர், தங்கள் தலைவர் அபு அப்துல்லா என்று அறியப்படுகிற இஸ்னிலான் ஹேபிலானுடன் இணைந்து செயல்பட்டு வந்தனர்.
அவர்களின் கொட்டத்தை அடக்க பிலிப்பைன்ஸ் ராணுவம் முடிவு செய்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் ராணுவம் குண்டு வீச்சும், பீரங்கி தாக்குதலும் நடத்தியது. இதில் கிளர்ச்சியாளர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.
இதுபற்றி மூத்த ராணுவ அதிகாரி எட்வட்டோ அனோ, மணிலாவில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், “இந்த தாக்குதலில் அபு சயாப் இயக்கத்தின் தலைவர் இஸ்னிலான் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. ரத்தம் செலுத்த வேண்டி உள்ளது. அந்த சிகிச்சையை அளிக்காவிட்டால், அவர் இறந்து போகக்கூடும்” என கூறினார்.
2001-ம் ஆண்டு, பிலிப்பைன்ஸ்வாசிகள் 17 பேர், 3 அமெரிக்கர்கள் கடத்தப்பட்ட வழக்கில் பிலிப்பைன்ஸ் மத்திய விசாரணை முகமையால் தீவிரமாக தேடப்பட்டு வந்த நபர் இஸ்னிலான் என தகவல்கள் கூறுகின்றன.
Next Story