search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீக்கியர்கள் தாடி, தலைப்பாகையுடன் போலீஸ் பணியாற்ற நியூயார்க் நகர கமிஷனர் அனுமதி
    X

    சீக்கியர்கள் தாடி, தலைப்பாகையுடன் போலீஸ் பணியாற்ற நியூயார்க் நகர கமிஷனர் அனுமதி

    நியூயார்க் நகர போலீஸ் துறையில் வேலை செய்துவரும் சீக்கியர்கள் இனி தலைப்பாகையுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்படும் என நியூயார்க் நகர் போலீஸ் கமிஷனர் ஜேம்ஸ் ஓ’நீல் அறிவித்துள்ளார்.
    நியூயார்க்:

    உலக நாடுகளில் வாழும் சீக்கியர்கள் அனைவரும் தங்களது மத அடையாளமான தலைப்பாகையுடன் தான் வெளியே தோற்றம் அளிக்கிறார்கள்.

    பல நாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்று வசித்துவரும் சீக்கியர்கள் தலைப்பாகையுடன் அரசுப் பணிகளில் ஈடுபடுவதை சில நாடுகளில் உள்ள சீருடை சட்டங்கள் அனுமதிப்பதில்லை.

    பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக வாழ்ந்துவரும் சீக்கியர்கள் அங்கு ராணுவ பணிகளிலும் கடமையாற்றி வருகின்றனர். பணியின்போது இவர்கள் தலைப்பாகையுடன் தோன்றுவதற்கு ராணுவத்தின் சில பிரிவுகள் அனுமதி அளித்துள்ளன.

    இந்நிலையில், அமெரிக்காவின் வர்த்தக பெருநகரமான நியூயார்க் நகர போலீஸ் துறையில் வேலை செய்துவரும் சீக்கியர்கள் இனி தலைப்பாகையுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறுபான்மையினத்தவரான சீக்கிய பிரிவினரின் கோரிக்கைக்கு மதிப்பளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நியூயார்க் நகர் போலீஸ் கமிஷனர் ஜேம்ஸ் ஓ’நீல் அறிவித்துள்ளார்.

    இங்குள்ள போலீஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, வழியனுப்பும் நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற ஜேம்ஸ், இந்த ஆண்டில் மட்டும் 557 பேர் இங்கு பயிற்சியை நிறைவு செய்துள்ளதாகவும், இவர்களில் 33 பேர் முஸ்லிம்கள், இரண்டுபேர் சீக்கியர்கள் என்றும் தெரிவித்தார்.

    நியூயார்க் நகர போலீஸ் துறையில் பணியாற்றிவரும் சீக்கிய அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்று, அவர்கள் தாடி வைத்துகொள்வது, தலையை மறைப்பது போன்ற மதம்சார்ந்த கட்டுப்பாடுகளுக்கு மதிப்பளித்து போலீஸ் சீருடை சட்டத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    தற்போது நியூயார்க் நகர போலீஸ் துறையில் 160 சீக்கியர்கள் பணியாற்றி வருவதாகவும், இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த சீருடைசார்ந்த விதிவிலக்கு சீக்கியர்களுக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

    திருத்தப்பட்ட புதிய சீருடை கொள்கையின்படி, முகத்தில் இருந்து ஒன்றரை அங்குலத்துக்கு மிகாத தாடியை சீக்கிய போலீஸ் அதிகாரிகள் வைத்து கொள்ளலாம். நீலநிறத்திலான தலைப்பாகையும், அதற்குமேல் போலீஸ் தொப்பியையும் அணிந்து கடமையாற்றலாம் என ஜேம்ஸ் ஓ’நீல் அறிவித்துள்ளார்.

    இந்த முடிவுக்கு இங்குள்ள சீக்கிய போலீஸ் அதிகாரிகள் சங்கம் வரவேற்பும் நன்றியும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் வாழும் சீக்கிய இனத்தவர்களுக்கு மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தி தந்துள்ளதாக பிற சீக்கிய அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
    Next Story
    ×