search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழிந்து வரும் அலெப்போ: கண்கலங்க வைக்கும் 7-வது சிறுமியின் டுவிட்டர் பதிவுகள்
    X

    அழிந்து வரும் அலெப்போ: கண்கலங்க வைக்கும் 7-வது சிறுமியின் டுவிட்டர் பதிவுகள்

    சிரியாவின் அலெப்போ நகரில் குண்டுகளை போட வேண்டாம், அமைதியாக இருக்க விடுங்கள் என்று வலியுறுத்தி 7 வயது சிறுமி டுவிட்டரில் கண்கலங்க வைக்கும் பல பதிவுகளை செய்து வருகிறார்.
    அலெப்போ:

    சிரியாவில் அரசு படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு இடையே சிதைந்து கொண்டிருக்கும் முக்கிய வர்த்தக நகரம் அலெப்போ. கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த இந்த நகரின் பெரும்பகுதியை அரசுப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

    இந்நிலையில், கிழக்கு அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி, குண்டு மழை பொழியும் தங்கள் நகரின் வாழ்க்கையை தனது டுவிட்டரில் தொடர்ந்து பதிவு செய்கிறார்.

    இந்த சிறுமியின் டுவிட்டர் பக்கத்தை அவளது தாய் பராமரித்து வருகிறார். இருவரும் கிழக்கு அலெப்போ நகரில் வசித்து வருகிறார்கள்.

    அந்த சிறுமியின் பெயர் பானா அலபெத். அவளது டுவிட்டர் பக்கத்தில் உள்ள பதிவுகள் அனைத்தும் மிகவும் உருக்கமாக உள்ளன. பதிவுகள் அனைத்தும் வித்தியாசமாகவும் உள்ளன.

    அவர் பதிவேற்றியுள்ள புகைப்படங்களுடன் கூடிய சில பதிவுகளை கீழே பார்க்கலாம் ....

    அலெப்போவில் இருந்து மதிய வணக்கம்.. போரை மறப்பது குறித்து நான் படித்து வருகிறேன்.

    தயது செய்து என்னை யாராவது இப்பொழுது காப்பாற்றுங்கள். நான் கட்டிலுக்கு அடியில் மறைந்து கொண்டிருக்கிறேன்.

    என் அன்புக்குரிய உலகே, நான் இன்றிரவு அழுதுகொண்டிருக்கிறேன், என்னுடைய தோழி இரவு நடந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டாள். என்னால் அழுவதை நிறுத்த முடியவில்லை.

    எனது நண்பர்களே இது நிலா அல்ல. குண்டு கீழே விழுந்து கொண்டிருக்கிறது. இன்றிரவு எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். நான் அச்சத்தில் மூழ்கியுள்ளேன்.

    ஏன் அவர்கள் எங்கள் மீது குண்டுகளை வீசி அப்பாவி மக்களை தினமும் கொல்கிறார்கள்.

    மேலும் விமான தாக்குதல் நடைபெற்ற இடங்களுக்கு சிறுமி பானா சென்று அந்த இடங்களைப் பற்றி சொல்வது போல் பல வீடியோ பதிவுகளையும் பதிவிட்டுள்ளாள். இவளது பதிவுகளை பலரும் பின்பற்றி வருகிறார்கள்.

    அவளது ஒரே கோரிக்கை அலெப்போ நகரை அமைதியாக மாற்றுங்கள் என்பது தான்.
    Next Story
    ×