search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் ராணுவத்தின் கோரமுகத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீதான தடை நீக்கம்
    X

    பாகிஸ்தான் ராணுவத்தின் கோரமுகத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் மீதான தடை நீக்கம்

    இந்தியா மீது தாக்குதல்களை நடத்திவரும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அந்நாட்டின் ராணுவமும் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.யும் துணையாக இருக்கும் உண்மைகளை கட்டுரை வடிவத்தில் வெளியிட்ட பிரபல நாளிதழின் துணையாசிரியர் வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது.
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ராணுவ தலைமையகத்தின்மீது கடந்த மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் பல தீவிரவாதிகளும், சில பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

    எல்லைகடந்து சென்று பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதிகளை வேட்டையாடிய இந்திய ராணுவ வீரர்களின் சாகசத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்திருந்தன. இதனால் மிரண்டுப்போன பாகிஸ்தான், சர்வதேச சமுதாயத்தில் நாம் தனிமைப்படுத்தப்படுவோம் என எண்ணி பயந்தது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல நாளிதழான ‘டான்’, பாகிஸ்தானின் மிரட்சி தொடர்பாக முகப்பு பக்கத்தில் ஒரு சிறப்பு கட்டுரை தீட்டியது. டான் நாளிதழின் மூத்த துணையாசிரியர்களில் ஒருவரான சிரில் அல்மெய்டா என்பவர் இந்த கட்டுரையை எழுதி இருந்தார்.

    இந்திய வீரர்கள் பாகிஸ்தான் மண்ணுக்குள் நுழைந்து நடத்திய ‘சர்ஜிக்கல் ஆபரேஷன்’ அதிரடி தாக்குதலுக்கு பின்னர் அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரிப் தலைமையில் அரசு உயரதிகாரிகள் மற்றும் ராணுவத்தின் முப்படை தளபதிகள் பங்கேற்ற ரகசிய ஆலோசனை கூட்டம் தொடர்பான தகவல்கள் அந்த சிறப்பு கட்டுரையில் இடம்பெற்றிருந்தன.

    பாகிஸ்தான் மண்ணில் இருந்தவாறு இந்தியாமீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள்மீது உள்ளூர் போலீசாரும் உளவு நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்து கைது செய்யும்போது, அந்நாட்டின் ராணுவமும் பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.யும் கைதான தீவிரவாதிகளை விடுவித்து அழைத்து செல்வது தொடர்பாக நவாஸ் ஷெரிப் தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தனது கட்டுரையில் சிரில் அல்மெய்டா குறிப்பிட்டிருந்தார்.

    இனியும், நாட்டின் சட்டம்-ஒழுங்கு போன்ற உள்ளாட்சி விவகாரங்களில் ராணுவமும் ஐ.எஸ்.ஐ.யும் தலையிட்டால் விளைவுகள் விபரீதமாகிவிடும். இனி, இதுபோன்ற தலையீடுகளுக்கு இடமளிக்க கூடாது என அரசு அதிகாரிகள் இந்த கூட்டத்தின்போது வலியுறுத்தியதாகவும், இதை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஆதரித்ததாகவும் அந்த கட்டுரை சுட்டிக்காட்டி இருந்தது.

    இந்த கட்டுரை அந்த நாளிதழின் கடந்த 6-ம் தேதி பதிப்பில் வெளியானவுடன் அங்குள்ள இந்தியாவுக்கு எதிரான அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாட்டின் உச்சபட்ச பாதுகாப்பு தொடர்பான ரகசிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை எப்படி வெளிப்படையாக நாளிதழ்களில் வெளியிடலாம்? என அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இதுதொடர்பாக விளக்கம் அளித்த அரசு உயரதிகாரிகள் மேற்படி கட்டுரை யூகங்களின் அடிப்படையில் புனையப்பட்டதாகும், அதில் சற்றும் உண்மை இல்லை என்று புளுகி வந்தனர்.

    அவர்களின் பொய்க்கு பலம்சேர்க்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இந்த புனைக்கதையை வெளியிட்டவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய இந்த கட்டுரையை எழுதிய சிரில் அல்மெய்டாவின் பெயரை வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலில் இணைத்திருப்பதாக அரசின் சார்பில் அவருக்கு தகவல் அனுப்பப்பட்டது.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிரில் அல்மெய்டா, நான் பாகிஸ்தான் மண்ணில் பிறந்து, இந்த நாட்டில் வாழும் குடிமகன். எந்த வெளிநாட்டுக்கும் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை என குறிப்பிட்டார்.

    நாட்டில் நடக்கும் உண்மை நிலவரத்தை தோலுரித்து காட்டிய நேர்மையான பத்திரிகையாளருக்கு பாகிஸ்தான் அரசு விதித்துள்ள இந்த திடீர் தடை சகப்பத்திரிகையாளர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

    இவ்விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு நேரில் சென்ற பத்திரிகை உரிமையாளர்கள் மற்றும் நிருபர்கள் சங்க நிர்வாகிகள், ஊடகங்கள் மீது அரசு விதிக்கும் கட்டுப்பாடு தொடர்பாக தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

    இந்த நிலையில், வெளிநாடுகளுக்கு செல்ல சிரில் அல்மெய்டாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சுதந்திரமான ஊடகங்கள் நாட்டின் நலன்களை பாதுகாப்பதோடு மட்டுமின்றி, நாட்டின் எதிரிகள் செய்துவரும் பொய்ப்பிரசாரத்தை முறியடிக்கும் விதமாகவும் செயல்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிரில் அல்மெய்டா எழுதிய கட்டுரைக்கு போதுமான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக ‘டான்’ நாளிதழ் மீண்டும், மீண்டும் கூறிவரும் வேளையில், நல்லெண்ண அடிப்படையில் சிரில் அல்மெய்டா மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டாலும், மேற்படி புனைக்கட்டுரை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனவும் உள்துறை அமைச்சகம் மிரட்டல் விடுத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×